ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பு தொடர்பாக முக்கியமான 10 அப்டேட்களை இங்கு காணலாம்!
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக ‘தர்மயுத்தம்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டிருக்கிறார். 2017 ஜூலை 12-ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறினார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரமேஷ் உடன் இருந்ததாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்.
Read More: இபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதாவது, ஆகஸ்ட் மாதம் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைவதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் ஆக்க துணை புரியும்படி கேட்டதாக டிடிவி தரப்பு கூறுகிறது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகார் தொடர்பான முக்கிய அப்டேட்ஸ் இங்கே:
1.பொது மேடைகளில் எங்களது குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கூட என்னை சந்திக்க பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக அப்பாய்ன்மென்ட் கேட்கிறார். எதற்கு இந்த இரட்டை வேடம்?- டிடிவி தினகரன் அக்டோபர் 4-ம் தேதி பேட்டியில்!
2. ஓ.பன்னீர்செல்வம் இப்போது அப்பாய்ன்மென்ட் கேட்பது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி நேரடியாகவே டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்தார் - தங்க தமிழ்ச்செல்வன்
Read More: ஓ. பன்னீர்செல்வம் என்னை சந்தித்து மன்னிப்பு கேட்டார் : டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!
3. டிடிவி தினகரனுடன் சந்திப்பு, கடந்த காலம்! இதற்கு பின்னர் விரிவாக பதில் சொல்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம் இன்று (அக் 5) காலை பேட்டியில்!
4. அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் இப்படி கூறுவதாக தெரிகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
5. டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க மாட்டார். தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கட்டுக்கதைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
6. அமமுகவை அதிமுகவில் இணைக்க கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் அண்மையில் தூதுவிட்டார். அவரை சேர்க்க நாங்கள் சம்மதிக்கவில்லை. தூதுவிட்டதை அவர் மறுத்தால், ஆதாரத்தை வெளியிட நான் தயார்.
டிடிவி தினகரன் கட்சி போணியாகாததால் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார். இரு அணிகளும் இணைந்த பிறகு டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்திக்கவில்லை - அமைச்சர் தங்கமணி
7. ஓபிஎஸ் என்னை 2017 ஜூலை 12-ம் தேதி என்னை பொது நண்பர் உதவியுடன் சந்தித்ததும், அண்மையில் அதே பொது நண்பர் உதவியுடன் அப்பாய்ன்மென்ட் கேட்டதும் உண்மை. இதை அவர் மறுத்தால் ஆதாரங்களை வெளியிட நான் தயார்.
அமமுக-வை இணைக்க நான் கேட்டதற்கு ஆதாரம் இருந்தால் அமைச்சர் தங்கமணி வெளியிடட்டும். மேடையில் ஒன்றும், ரகசியமாக ஒன்றும் பேசும் ஓ.பிஎஸ்.ஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், அவரது தொடர்பை விரும்பாமலும்தான் இந்தத் தகவல்களை வெளியிடுகிறோம். இதில் வேறு அரசியல் நோக்கம் இல்லை - டிடிவி தினகரன் இன்று மதியம் பேட்டியில்!
8. டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்தது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருவரும் இணைந்தால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் - சூலூர் அதிமுக எம்.எல்.ஏ. கனகராஜ்
9. டிடிவி தினகரனை மீண்டும் இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் கூடி பேசித்தான் முடிவெடுக்க முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ
10. ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் சந்திப்பை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை - இரட்டை இலையில் ஜெயித்த தனியரசு எம்.எல்.ஏ.