தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நண்பர் ஒருவர் மூலம் தூது அனுப்பு தினகரனை சந்தித்தார் என்று தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் வெளியிட்டார்.
ஓ.பி.எஸ் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் பேட்டி :
இந்த தகவல் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று மதியம் 12 மணியளவில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து பேசினார். அந்த சந்திப்பில்,
“ஓ.பி.எஸ் என்னை நேரில் சந்தித்தார் என்று தங்க தமிழ்செல்வன் ஒரு தகவலை வெளியிட்டார். அந்த தகவலை நான் மறுக்கவில்லை. அவர் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்து பேசினார். மேலும் கடந்த வாரம் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தூது அனுப்பினார்.
Read More: இபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Read More: ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் பஞ்சாயத்து! டாப் 10 அப்டேட்ஸ்
இத்தனை நாட்கள் ஏன் இதை கூறாமல் இருந்தேன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வளவு மாதங்கள் எனக்கு இதை கூற வேண்டும் என்று தோன்றவில்லை. அதை கூற நான் விரும்பவுமில்லை. ஆனால் இப்போது ஓ.பி.எஸ் சந்திப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை கூறியுள்ளேன்.
சென்ற வருடம் திகார் சிறையில் இருந்து ஜூன் 30 வந்த பிறகு என்னை சந்திக்க வேண்டும் என்று அமைதி படை அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். எதற்கு சந்திக்க வேண்டும் என்கிறார் என்று கேட்டபோது, காரணம் கூறாமல் பார்க்க வேண்டும் என்று மட்டும் சொன்னார்கள்.
சரி எதற்கு என்று தெரிந்து கொள்வோம் என்று சந்தித்தேன். இருவரும் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மாதத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர் தாம் எடப்பாடியுடன் இணைந்து தவறு செய்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது சந்தித்து பேசியதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை.
அதன் பின்னர் என்னிடம் இவ்வாறெல்லாம் பேசிவிட்டு, பிறகு என்னை பற்றியே அவதூறாக பல விஷயங்கள் கூறி வந்தார். ஆனால் தற்போது செப்டம்பர் கடைசி வாரத்தில் மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தூது விட்டார். அப்போது கூட நான் தங்க தமிழ்ச்செல்வனிடம் இதை கூறினேன். அவர் சிரித்துகொண்டே பன்னீர்செல்வத்திற்கு வேறு வேலையில்லை என்று கூறிச்சென்றார்.
டிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா? அதிமுக.வில் பரபரப்பு
கடந்த வாரமும் என்னை சந்தித்து பேச வேண்டும் என்று நண்பர் ஒருவர் மூலம் தூது அனுப்பினார். எதற்கு என்று கேட்டபோது, எடப்பாடி ஆட்சியை இறக்க வேண்டும் என்றும், என்னை பதவியில் அமர்த்துவது குறித்து பேச வேண்டும் என்று கூறினார்கள்.
என்னைப் பற்றி அவ்வளவு பேசிவிட்டு இவர் மீண்டும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியதை நான் விரும்பவில்லை. எனவே அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று தூது அனுப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதை நாங்கள் வெளியே கொண்டு வந்தோமே தவிர வேறு ஏதும் நோக்கமில்லை.” என்று கூறினார்.