தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 20% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் வெளியூர் செல்லும் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், நான்கே நிமிடங்களில் ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் புக்கிங் செய்துவிடுவதால், பெரும்பாலானோருக்கு பேருந்தே பயண கதியாகிவிடுகிறது.
முன்னதாக, தீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்து இருந்தார். இதற்கான டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர் நவ.1ம் தேதி தொடங்குகிறது.
அரசு பேருந்துகளின் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக, பலரின் ஆப்ஷன் ஆம்னி பேருந்துகளாக உள்ளது. அதேசமயம், சில ஆம்னி பேருந்து ஓனர்கள், பண்டிகைக் காலங்களை பயன்படுத்தி டிக்கெட் விலையை ஏற்றி காசு பார்ப்பதுண்டு. இதுபோன்று விலை அதிகமாக விற்கும் ஆம்னி ஒனர்களை அரசு தண்டித்தும் வருகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் 20% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 20% உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல் டீசல் கட்டண உயர்வால் ஆம்னி பேருந்து கட்டண உயர்வை தடுக்க இயலவில்லை என்றும் அச்சங்கம் கூறியுள்ளது.
இந்த கட்டண உயர்வு அறிவிப்பால், சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு முந்தைய நாள் நவ.5 பொது விடுமுறை - தமிழக அரசு அரசாணை