மாநிலத் தலைமை செயலாளர் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 17 லட்சம் மனுக்களில், முக்கியமான ஒரு லட்சம் மனுக்களை திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், இந்த பெருந்தொற்று காலத்தில் நிவாரண மனுக்களின் அவசியத்தை எடுத்துக் கூறிய டி. ஆர். பாலு , இந்த மனுக்களை எத்தனை நாட்களுக்குள் அலுவலர்களுக்கு அனுப்பிவீர்கள் என திமுக தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு,”கொரோனா பாதிப்பால் குறைந்தபட்ச அலுவலர்கள் தான் பணி செய்கின்றனர். அதனால் உறுதியான தேதியை என்னால் கூற முடியாது, நீங்கள் என் நிலையில் இருந்தால் இதற்கு உறுதியான பதிலைக் கூறமுடியுமா? என்று தலைமை செயலாளர் பதிலளித்தார்.
நாங்கள் மக்கள் பிரிதிநிதிகளாக இருப்பதாலும், அதிகப்படியான பொறுப்பு எங்களுக்கு இருப்பதாலும், கட்டாயம் எங்களால் பதில் கூற முடியும் என்று திமுக மக்களவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஒரு கட்டத்தில், தலைமை செயலாளர், “This is the Problem with you people, You don’t Understand our difficulties” எனத் திமுக உறுப்பினர்கள் பார்த்து பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், கோரிக்கைகளை முழு கவனம் செலுத்தாமல், சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் தலைமை செயலாளர் கவனம் செலுத்தியதாகவும், டி.ஆர் பாலு பின்னர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார் .
ஆனால், தலைமை செயலாளர் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். நேற்று மாலை அவர் வெளியிட்ட அறிக்கையில், “அவர்கள் கூறுவது போல் என் அறையில் நான் அமரும் சோபாவில் இருந்து தொலைக்காட்சியைப் பார்க்க முடியாது. எனவே, அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது நான் தொலைக்காட்சியைப் பார்த்தேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. மேலும், நான் அவர்களை வரவேற்று அமர வைப்பதில் எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்பதற்கு அனனைவரும் சோபாவில் அமைந்துள்ள, தினகரனில் வெளியான படமே சாட்சி” என்று பதிலளித்தார்.
‘ஒன்றிணைவோம் வா’ வெற்றியா? தோல்வியா?
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழக தலைமை செயலாளர் சண்முகம் மீது பாராளுமன்ற உரிமைக் குழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் தலைமை செயலளார் நடந்து கொண்டதால், உரிமைக் குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலத் தலைமை செயலாளர் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தயாநிதி மாறனும் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டி. ஆர். பாலு, தனது கடிதத்தில், “ஒழுக்கமற்ற நடத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல், நாங்கள் அவருக்கு பொறுமையுடன் மக்களின் துயரை எடுத்துரைத்தோம். ஆனால், தலைமை செயலாளர் குறைந்தபட்ச அக்கறை கூட காட்டவில்லை , ”என்று குறிபிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil