பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத பெண் சிசு கொலை! - இந்த கொடுமை என்று தீருமோ
Theni: சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் திட்டமிட்டுள்ளனர்
Tamil Nadu News: பெண் குழந்தை பெற்றெடுக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நம் தமிழகத்தில் பெற்றெடுக்கப்படும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களை கொலை செய்யும் கொடுமை இன்னும் ஒழிந்தபாடில்லை.
Advertisment
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், கவிதா ஆகியோருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10, 8, 2 ஆகிய வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அக்குழந்தை மார்ச் 2-ம் தேதி இறந்துவிட்டதாகக் கூறி வீட்டின் அருகே அடக்கம் செய்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவினர், நேரடியாகக் கள ஆய்வில் இறங்கினர்.
அப்போது, சுரேஷ் மற்றும் கவிதா இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதியை விசாரணை செய்யுமாறும், தனக்கு அறிக்கை அளிக்கும்படியும் ஆண்டிபட்டி தாசில்தார் உத்தரவிட்டார். விசாரணை செய்த ஜோதி, சுரேஷ் - கவிதா தம்பதிகள் மீது சந்தேகம் இருப்பதாக, ராஜதானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் தான், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது தேனி மண்ணில் மீண்டும் இப்படியொரு கோர சம்பவம் நடந்திருக்கிறது.
அளவோடு பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வும் இல்லாமல், ஆண் பிள்ளை தான் வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இருக்கும் வரை இதுபோன்ற கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியாது என்பதே நிதர்சன உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”