முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் நேற்று (06/09/2018) உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு அனைவரும் வரவேற்பினை அளித்துள்ளனர். திமுக கட்சிகள் உட்பட அனைத்து கட்சியினரும், சீக்கிரம் அந்த 7 நபர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
திமுக கருத்து
திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் “எடப்பாடி பழனிசாமி மிக விரைவில் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டும்” என ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்!
27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) 6 September 2018
மதிமுக கருத்து
மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் “ஏற்கனவே மாநில அரசு எடுத்திருந்த முடிவினை விரைந்து செயல்முறைபடுத்தி பேரறிவாளன் உட்பட 7 நபர்களையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
“சிறைச் சுவர்களில் இருந்து வெளியே வந்து வெளிச்சத்தினை அவர்கள் காணப் போகிறார்கள். அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், 26 வருட சிறை தண்டனையில் இருந்து அவர்களுக்கு மிகவும் தாமதமாகவே விடுதலை கிடைத்திருக்கிறது” என்றும் வைகோ கூறியுள்ளார்.
'பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முதல்வரை சந்திக்கிறேன்' - அற்புதம்மாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் “தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் ஏழு நபர்களையும் சீக்கிரமாக விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். ஏற்கனவே அவர்கள் மிகவும் நீண்ட கால தண்டனையை அடைந்துவிட்டனர் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
மற்ற கட்சியினர்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக செயலாளர் பாலக் கிருஷ்ணன், தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் அனைவரும் இந்த தீர்ப்பினை வரவேற்பதோடு தமிழக அரசின் துரித செயல்பாட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை - முதல்வர் ஆலோசனை
முன்னதாக, தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் “ ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி உரிய முடிவு எடுப்பார்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.