scorecardresearch

அ.தி.மு.க படுதோல்விக்கு காரணம் நம்பிக்கை துரோகி இ.பி.எஸ் தான்; ஓ.பி.எஸ் ஆவேசம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது – ஓ.பி.எஸ்

OPS1

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்ததற்கு முழு முதற் காரணம் திரு. எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கு இ.பி.எஸ் தான் காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு கட்சியினுடயை வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளின் வலிவின்மையில் தான் இருக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. ஈரோடு தேர்தல் முடிவுகள் இதைத்தான் உணர்த்தியுள்ளது.

எம்.ஜி.ஆரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையிலும், கழக வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற அம்மாவின் புகழுக்குப் பங்கம் ஏற்படும் வகையிலும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. பல காரணங்களால் பொதுமக்கள் தி.மு.க அரசின்மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்பைப் பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க அடைந்ததற்குக் காரணம், கழகத்துக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடிந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான். இவற்றைப் பார்க்கும்போது `பொதுப்பணி என்ற பெயரால், தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது ஏறக்குறைய 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பதைப் பார்க்கும்போது எதிர்க்கட்சியான அ.தி.மு.க வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஓர் இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்ட நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், ‘இரட்டை இலை’ சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்ததற்கு முழு முதற் காரணம் திரு. எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

‘தான்’ என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள், மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டபட்டவர்களை எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தனது அடையாளமாக வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கழகம் படுதோல்வியைச் சந்தித்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தின் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நீதியும், நேர்மையும் தவறாமல், நடுநிலையோடு சிந்தித்து, தர்மத்தின் பக்கம் நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது. எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தின் மூத்த தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும்.

கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops accuses eps for admk lose in erode by poll

Best of Express