OPS appoints ADMK new functionaries Vaithilingam as Joint coordinator: அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை கோரிக்கை காரணமாக, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றறிருந்ததால், அ.தி.மு.க.,வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்
அதேநேரம், ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார்.
இருபுறமும் மாறி மாறி நிர்வாகிகள் நீக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு, அ.தி.மு.க.,வில் கே.பி.முனுசாமி மற்றும் பொன்னையனை புதிய பதவிகளில் நியமித்தும், 11 தலைவர்களை அமைப்புச் செயலாளர்களாக நியமித்தும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேநேரம் ஓ.பி.எஸ் அதிமுகவில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை அறிவித்தார்.
அடுத்ததாக தற்போது, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்தும் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
மேலும், அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் 10 பேரை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, சேதுராமன் உள்பட 10 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil