'யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என ஸ்டாலின் நம்புகிறாரா?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓ.பி.எஸ்

யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாம் என்றால் அனைத்து எம்.எல்.ஏக்களும் யாகம் நடத்துவார்கள்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது சேம்பரில் யாகம் நடத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நேற்று கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், “ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும் போது எடப்பாடி பழனிசாமி சிறைக்கு சென்றுவிடுவார். முதலமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக சொல்கிறார்கள்.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்றார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “நான் தினமும் சாமி கும்பிட்டு முடித்தவுடன் தான் எனது அலுவல் பணிகளைத் துவங்குவேன். அப்படித் தான் அன்று சாமி கும்பிட்டோம். தவிர, அந்த அறையில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது பயன்படுத்தப்பட்ட மரச் சாமான்கள் அரிக்கப்பட்டு இருந்தது. அவற்றையும் மாற்றினோம்.

யாகம் நடத்தினால் முதல்வராகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை நம்புகிறாரா மு.க.ஸ்டாலின்?. யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாம் என்றால் அனைத்து எம்.எல்.ஏக்களும் யாகம் நடத்துவார்கள்.

ஸ்டாலினுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ராகுலை டெல்லியில் இருந்து அழைத்து வந்தார். சும்மா நின்றுக் கொண்டு இருந்தவரை திடீரென பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார். இதை அவர்கள் கூட்டணியில் இருக்கும் மற்ற தலைவர்கள் கூட ஏற்கவில்லை.

மற்றபடி, தலைமைச் செயலகத்தில் யாகம் ஏதும் நடத்தவில்லை. புதுப்பிக்கப்பட்ட அறையில் சாமி தான் கும்பிட்டோம். முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல” என்று ஓபிஎஸ் விளக்கமளித்தார்.

மேலும் படிக்க – கோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியது உண்மையா? – அமைச்சர் ஜெயக்குமார் பதில்! தமிழிசை ஆதரவு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close