scorecardresearch

ஓ.பி.எஸ் வீட்டில் திடீர் ஆலோசனை: ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் மகன் உசேன் நடக்கவில்லை’ என புகார்

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவைத்தலைவர் முன்கூட்டியே முடிவு செய்து அறிவித்திருப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது – ஓ.பி.எஸ் தரப்பு

ஓ.பி.எஸ் வீட்டில் திடீர் ஆலோசனை: ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ் மகன் உசேன் நடக்கவில்லை’ என புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர் தேர்வில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இ.பி.எஸ் தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரம் ஓ.பி.எஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்புமனுவில் கையெடுத்திட இ.பி.எஸ்.,க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் படிவத்தை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பி வைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்: பொதுக்குழு கடிதம் வாட்ஸ் அப், இ மெயில், ஸ்பீட் போஸ்ட் மூலமாக ஓ.பி.எஸ்-க்கு அனுப்பி விட்டோம்: ஜெயக்குமார்

இந்தநிலையில், சென்னையில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டில் அவசர ஆலோசனை நடந்தது. பின்னர், நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அ.தி.மு.க வேட்பாளர் தேர்வில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், வேட்பாளர் தேர்வு தொடர்பாக அவைத்தலைவர் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழ் மகன் உசேன் நிராகரித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள செந்தில் முருகன் பெயர் இடம் பெறவில்லை. இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத தென்னரசுவை, அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவைத்தலைவர் முன்கூட்டியே முடிவு செய்து அறிவித்திருப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. இந்த செயல் மூலம் அவைத்தலைவர் நடுநிலை தவறிவிட்டார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

பின்னர் தனியாக செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவைத்தலைவர் நடுநிலையோடு செயல்படவில்லை. இந்ததகவலை உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய அதிகார அமைப்புகளுக்கு தெரிவிக்க உள்ளோம். இறுதியாக இரட்டை சிலை சின்னத்தில் யார் நின்றாலும், அவரை நாங்கள் ஆதரிப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops faction says admk presidium president tamil magan hussain did against supreme court order