பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி தயார்?

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு ஜூலை 10-ம் தேதி மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. ராகுல் காந்தியே ‘ட்வீட்’ மூலமாக தெரிவித்த பிறகுதான் இந்தத்...

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: டெல்லியில் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. தமிழகத்தின் ஜிக்னேஷ் மேவானி ஆகிறாரா பா.ரஞ்சித்?

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு ஜூலை 10-ம் தேதி மாலை டெல்லியில் ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்தது. ராகுல் காந்தியே ‘ட்வீட்’ மூலமாக தெரிவித்த பிறகுதான் இந்தத் தகவல் வெளியே தெரிந்தது. ரஞ்சித்துடன் அவரது படங்களில் தோன்றும் நடிகர் கலையரசனும் இணைந்து சந்தித்தார். இருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி, அவற்றை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

பா.ரஞ்சித் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மெட்ராஸ், கபாலி, காலா போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களின் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை டெல்லியில் சந்தித்தேன். ரஞ்சித்துடன் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை பேசினேன். அவரோடு பேசியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உரையாடல் தொடர விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு, பா.ரஞ்சித் தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி, Pa.Ranjith-Rahul Gandhi Meeting

பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு

பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசியல், கலை மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் மீதான சாதி-மதம் சார்ந்த மிரட்டல்கள் குறித்து பேசினோம். என்னை சந்தித்த ஒப்புக்கொண்டதற்கு நன்றி சார்! நமது விவாதம் சரியான வடிவம் பெறும் வகையில் தொடரும் முனைப்பில் இருக்கிறேன். ஒரு தேசிய தலைவர் அனைத்து தரப்பு கொள்கை சார்ந்தவர்களையும் சந்தித்து உரையாடுவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார் பா.ரஞ்சித்.

பா.ரஞ்சித் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பேரறிவாளனை விடுவிப்பது குறித்து அவரிடம் கோரிக்கை வைத்தேன். அவரது விடுதலைக்கு எதிராக தங்கள் குடும்பத்தினர் இல்லை என்றும் தன்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் ராகுல் கூறினார்’ என குறிப்பிட்டார்.

பா.ரஞ்சித், தலித் இளைஞர்களின் ஹீரோ?

இதைத் தாண்டி, பா.ரஞ்சித்தின் சந்திப்பில் 2019-ம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்கும் இருப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஜிக்னேஷ் மேவானி ஒரு காரணம்!

குஜராத்தில் தலித் தலைவராக உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி, சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. பதிலுக்கு ஜிக்னேஷ் மூலமாக குஜராத் தலித் வாக்கு வங்கியில் பெரும்பகுதியை காங்கிரஸ் தன் பக்கம் திருப்பியது.

தமிழ்நாட்டிலும் சமீப காலமாக பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக தலித் இளைஞர்கள் திரள்கிறார்கள். குறிப்பாக மதுரை பகுதியில் ஒடுக்கப்பட்ட இரு சமூகத்தினர் இடையே பிரச்னை வெடித்தபோது, நேரடியாக சென்று இரு சமூகத்தினரிடமும் அவர் பேசி சமரசம் செய்ததை பலரும் வரவேற்றனர்.

மெட்ராஸ், கபாலி, காலா படங்களில் தலித்தியம், அம்பேத்கரியம் பேசியதன் மூலமாகவும் தலித் இளைஞர்களில் பலரும் அவரை ஹீரோவாக பேசி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகளுடன் அதிகம் ஒட்டாமலேயே பா.ரஞ்சித் இயங்கி வருகிறார்.

இந்தச் சூழலில்தான் பா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து நடந்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஸ் தாகூர் என அமைப்பு ரீதியாக வலுப்பெறாத தலைவர்களை இணைத்துக்கொண்டே அவர்கள் சார்ந்த சமுதாய வாக்குகளை கபளீகரம் செய்த தந்திரத்தை தமிழகத்திலும் காங்கிரஸ் அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

2019 தேர்தல் ராகுல் காந்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என சொல்லத் தேவையில்லை. எனவே திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்தாலும்கூட, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒன்றை பா.ரஞ்சித்துக்கு விட்டுக்கொடுத்து அவரை சுயேட்சையாக களம் இறக்க காங்கிரஸ் தயாராகும் என பேசப்படுகிறது.

பா.ரஞ்சித், தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி ஆவாரா?: ரவீந்திரன் துரைசாமி விளக்கம்

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் இது குறித்து கேட்டோம். ‘தலித் ஹீரோக்களை முன்வைத்து தொடர்ந்து 3 படங்கள் இயக்கியவர் என்ற அடிப்படையில், அந்த சமூக இளைஞர்கள் மத்தியில் பா.ரஞ்சித்துக்கு கிரேஸ் இருப்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் தலித் அரசியலில் இன்று வலிமையான கட்டமைப்பு கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள்! ஆனால் திருமாவளவனும், ராமதாஸும் எப்போது கூட்டணி வைத்தார்களோ, அப்போதே தலித் இளைஞர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் திருமாவின் செல்வாக்கு சரிந்ததையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் இன்று தேசியக் கட்சிகளுக்கு தேவைப்படுவதையும் மறுப்பதற்கில்லை. ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற தலித் தலைவர்களை பிரதமர் மோடி தன் பக்கம் வைத்திருக்கிறார். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸும் நிச்சயம் தலைவர்களை தனது அணிக்கு இழுக்கும்.

குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார். உத்தரப்பிரதேசத்தில் தலித் தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் ஆசாத், பாஜக முதல்வர் யோகிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். அவர்களை பயன்படுத்தும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் பா.ரஞ்சித்தை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

காலா இயக்குநரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்… இருவரும் பேசிக்கொண்டது இது தான்

கட்சி கட்டமைப்பு இல்லாமல் பா.ரஞ்சித் போன்றவர்களால், தனியாக போட்டியிட்டு எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியாது. ஆனால் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒரு இடத்தை பெற்றுக்கொண்டு போட்டியிட்டால், ஜெயிக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை.’ என்றார் ரவீந்திரன் துரைசாமி.

-ச.செல்வராஜ்

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close