By: WebDesk
Updated: December 25, 2019, 01:07:39 AM
Periyar bjp, periyar maniammai, periyar E. V. Ramasamy, பாரதிய ஜனதாக் கட்சி, மணியம்மை பெரியார்
Periyar EV Ramasamy: தந்தை பெரியாரின் நினைவு தினமான இன்று அவரை அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. மு.க.ஸ்டாலின், வைகோ மட்டுமல்லாது, அதிமுக தலைவர்களும் விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
தந்தை பெரியார், சமூக சீர்திருத்தத் தந்தையாக மதிக்கப்படுகிறார். தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவற்றில் அவரது பணி அளப்பறியது. இன்று (டிசம்பர் 24) தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் நினைவு தினத்தை திராவிட இயக்கத்தினரும், பகுத்தறிவாளர்களும் அனுசரித்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில் தமிழ்நாடு பாஜக.வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியான ஒரு ட்வீட் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ‘மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!’ என ஆரம்பித்த அந்த ட்வீட்டில், ‘குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக இன்று ட்விட்டரில் வெளியிட்ட கண்டனப் பதிவில், ‘#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?
அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜக தனது ட்விட்டர் கருத்து தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘பெரியார் குறித்து அவதூறு பரப்பியவர் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்’ என்றார்.
அமைச்சர் ஜெயக்குமார், ‘சமூக சீர்திருத்தத்திற்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும் தவறு’ என குறிப்பிட்டார். தொடர் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த ட்வீட்டை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறது.