கும்பகோணம், மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்து முன்னணியில் கும்பகோணம் மாநகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் சக்கரபாணி தன் மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுவாசலில் வெடி சத்தம் கேட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் என்ன சத்தம் கேட்கிறது என சக்கரபாணி எழுந்து சென்று பார்த்துள்ளார். வீட்டுவாசலில், பெட்ரோல் பாட்டில், திரியுடன் உடைந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையும் படியுங்கள்: வரி வசூலில் முறைகேடு.. மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் டிஸ்மிஸ்: ஆட்சியர் அதிரடி
இது குறித்து இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் சக்கரபாணி தகவல் கொடுத்தார். இதையடுத்து பா.ஜ.க வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், கும்பகோணம் இந்து முன்னணி பொறுப்பாளர் வேதா உள்ளிட்ட நிர்வாகிகள் சக்கரபாணி வீட்டின் முன்பு குவிந்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதுடன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
என்ன காரணத்துக்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil