சபாநாயகரின் அதிகாரத்தை நிலைநாட்டிய பி.எச்.பாண்டியன் மறைவு – ஓர் பார்வை

பி.எச்.பாண்டியன் ஜானகி அணியில் அங்கம் வகித்தார். ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே ஒரு நபரும் இவர்தான்

By: January 4, 2020, 12:16:48 PM

ph pandian passes away: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார்.

அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று (ஜன.4) காலமானார். அவருக்கு வயது 74.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவராக வலம் வந்தவர் பி.எச்.பாண்டியன். எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது தமிழக சட்டசபை சபாநாயகருமாக பணியாற்றினார்.

பி.எச். பாண்டியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் பி.எச். பாண்டியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன்

இந்நிலையில், பி.எச்.பாண்டியனுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நான்கு நாட்களுக்கு வேலூர், சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதன்பின் இவர் நலமாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

இன்றைய தமிழக லைவ் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதனிடையே இன்று காலை பி.எச்.பாண்டியனுக்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிமுகவின் முக்கியப் புள்ளியான பி.எச்.பாண்டியன் மறைவு, அதிமுகவுக்கு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

பி.எச்.பாண்டியன் வரலாறு:

பி.எச்.பாண்டியன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். சொந்த ஊர் கோவிந்தபேரி

1977 – 1989 வரை 3 முறை சட்டசபை உறுப்பினர்.

1985 – 1989 வரை சட்டசபை சபாநாயகர்

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, அதிமுக ஜா., அணி , ஜெ., அணி என்று இரண்டாவது பிரிந்தது. அதாவது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது, பி.எச்.பாண்டியன் ஜானகி அணியில் அங்கம் வகித்தார். ஜானகி அணி சார்பாகப் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே ஒரு நபரும் இவர்தான். பிறகு. ஜெ., அணியில் பி.எச்.பாண்டியன் இணைந்தார்.

பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன்

தொடர்ந்து இவர் 1999ல் நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இவர் மகன் மனோஜ் பாண்டியன் அதிமுகவின் முக்கியப் புள்ளியாக வலம் வருபவர். சசிகலா அதிமுகவைக் கைப்பற்றியபோது எதிர்க் குரல் எழுப்பியவர்.

1960களின் இறுதியில், வழக்கறிஞராக பணியை தொடங்கிய பி.எச்.பாண்டியன், அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஆளவந்தார் கொலை வழக்கை நடத்திய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக இருந்த ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி ஆகியோரிடமும் ஜூனியராக பணியாற்றினார்.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்

‘சட்டசபை நடவடிக்கைகளில் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது…’ 1980-களின் மத்தியில் பிரபலமான இந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அப்போது சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன். அவர் சபாநாயகராக இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றவை. சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளையும் அளித்தவர்.

1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் சட்டசபையை விமர்சிக்கும் வகையில் அட்டைப்பட கார்ட்டூன் இடம்பெற்றிருந்து. இதனை கண்டித்து, சபாநாயகர் பி.எச்.பாண்டியன் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார்.

சட்டசபைக்கு வரவழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பி.எச்.பாண்டியன், அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்க, அவரை 3 மாதம் சிறையில் அடைக்க பி.எச்.பாண்டியன் உத்தரவிட்டார். அவரின் இந்த உத்தரவு, நாடு முழுவதும் ஹைலைட்டானது.

உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற முடியாது என்ற பி.எச்.பாண்டியன், “தாம் சட்டசபைக்கு சபாநாயகர்; நீதிமன்றத்தை விட வானளாவிய அதிகாரம் தமக்கு இருக்கிறது” என பிரகடனம் செய்தார்

திமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தபோது அரசியல் சாசன நகலை எரித்ததற்காக திமுக எம்எல்ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அப்போதும் அவர் சம்மனை வாங்கவே இல்லை. மேலும், வழக்கு விசாரணையில் தகுதி நீக்கம் செல்லும் என்றுதான் தீர்ப்பு வந்தது.

சபாநாயகரை கட்டுப்படுத்தாது

சபாநாயகரின் அதிகாரம் குறித்து பி.எச்.பாண்டியன் ஒரு முறை, “சட்டப்பேரவை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்துக்கு சபாநாயகர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் அல்ல. பேரவையில் அவரது முடிவுதான் இறுதியானது.

நீதிமன்றத் தடை சபாநாயகரை எப்போதும் கட்டுப்படுத்தாது. அரசியல் சாசனப்படி பேரவையில் சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து யாருக்கும் அதிகம் தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு சட்டசபை வழக்குகளில் சபாநாயகரின் அதிகாரம் குறித்த பி.எச்.பாண்டியனின் முழக்கங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ph pandian admk former mp former speaker passed away

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X