பிளாஸ்டிக் தடை உத்தரவில், உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அளிக்கப்பட்ட விலக்கை நீக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
"போராட்டம் மூலம் நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு" - குடிநீர் ஆலைகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுற்றுசுழல் மற்றும் வன துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஓராண்டில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளை மூடவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 444 உணவு விடுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு, 42 விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மசூதிகள், தேவாலயங்கள், கோவில்களுக்கு உள்ளிட்ட வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதை காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என தமிழக டிஜிபியிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, பிளாஸ்டிக் தடை உத்தரவில் இருந்து, பால், தயிர், எண்ணெய் போன்ற உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்குவது குறித்து கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் பரிந்துரை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெமினி பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர்கள் தாக்குதல் - விசாரணை தீவிரம்
ஒரு முறை பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உணவு பொருட்களை அடைத்து வைக்கும் பிளாஸ்டிக்குக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கை நீக்குவது குறித்த அரசின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், ஆவின் பால் நிறுவனத்தில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆவணப்படங்களை திரைப்படங்களில் சேர்க்கவும், கல்வி நிறுவனங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 28 ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”