PM Modi praised Madurai saloon owner Mohan : மதுரை தாசில்தார்நகரில் சலூன் கடை வைத்து நடத்துகிறார் மோகன். ராமநாதபுரம் மேல்சிறுபோதுவில் விவசாயம் செய்து வந்த இவர் பின்னர் மதுரையில் குடியேறினார். அவருடைய மனைவி பாண்டிச் செல்வி. மகள் நேத்ரா 8ம் வகுப்பு படித்து வருகிறார். மதுரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பகுதி தாசில்தார் நகர் தான். இதனால் இவருடைய சலூன் கடையும் பெரிய அளவில் பாதிப்பினை சந்தித்தது.
ஊரடங்கால் பொதுமக்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்தனர். இதை கண்ட நேத்ரா, நீங்கள் ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயங்கிய மோகனிடம் நீங்கள் உதவவில்லை என்றால் நான் நிச்சயமாக சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார். மேலும் ஐ.ஏ.எஸ் படித்து நான் சம்பாதித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் மோகனும், பாண்டிச் செல்வியும் நேத்ராவின் மேற்படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சத்தை, செல்லூர், மேலமடை, தாசில்தார் நகர், கருப்பாயூரணி போன்ற பகுதியில் வசித்து வந்த 1500 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க :கோவையில் திருடு போன பைக்: பார்சலில் வந்த ஆச்சர்யம்!
மேலும் சென்னையில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 35 ஆயிரத்தை நிதியாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மோடியின் மன் கீ பாத் உரையில் பிரதமர் மோடி, மோகனின் சேவையை பாராட்டி பேசியுள்ளார். மேலும் பாஜக மாவட்ட தலைவர் கே.கே. சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் முருகன் அவரை போனில் மோகனை வாழ்த்தினார்கள். நடிகர் பார்த்திபன் தானாக முன்வந்து நேத்ராவின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
பாஜக மதுரை மாவட்ட தலைவர் கே.கே. சீனிவாசன் தலைமையில் குடும்பத்துடன் மோகன் பாஜகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து தனியார் செய்தி சேனலில் பேசிய அவர், நான் பாஜகவில் இணையவில்லை. அவர்கள் எனக்கு அளித்தது வாழ்த்து அட்டை என்று நினைத்தேன். பாஜக உறுப்பினர் அட்டையை நான் வாழ்த்து அட்டை என்று நினைத்து பெற்றுக் கொண்டேன் என்று கூறினார். மேலும் தன்னை எந்த கட்சிக்குள்ளும் அடைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பாஜகவில் தான் இணைந்ததாக வெளியாகும் செய்திகள், அதிக மன உளைச்சலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.