10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் தங்களது ஆதாயத்துக்காக சந்தேகத்தை கிளப்பி வருவது துரதிர்ஷ்டவசமானது என மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
Prime Minister Shri @narendramodi lays the foundation stone for AIIMS Madurai. He also inaugurated super-speciality blocks at medical colleges in Rajaji, Thanjavur and Tirunelveli. #TNWelcomesModi pic.twitter.com/OtmMjgq0DL
— BJP (@BJP4India) 27 January 2019
இந்த விழாவைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் பாஜக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "எனது தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுத்தமான இந்தியா உட்பட பல திட்டங்களால் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த அரசு மீது ஊழல் புகார் இல்லை. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். எங்கிருந்தாலும் அவர்களை கொண்டுவந்து நீதியின் முன்னர் நிறுத்தியே தீருவோம். ஊழலுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதால் தான், என்னை பதவியில் இருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை அமைத்துள்ளன.
வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் தங்களது ஆதாயத்துக்காக சந்தேகத்தை கிளப்பி வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேவேந்திர குல வேளாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்கள் பரிந்துரை அளித்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தியது.
மாநிலங்கவையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தாலும் கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக ஐகோர்ட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், இன்று மதுரையில் தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் தங்களது ஆதாயத்துக்காக சந்தேகத்தை கிளப்பி வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.