நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த பாமக, இன்று அக்கட்சியுடன் முறைப்படி கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னை நந்தனத்தில் கிரவுன் பிளாசா ஹோட்டலில் கையெழுத்தானது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், "பாமகவுக்கு 7 மக்களவையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் 1 இடம் அளிக்கப்பட்டுள்ளது. தவிர, 21 சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும். 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அதன்பின் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்த மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். பாமக சார்பில் 10 கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். அரசு அதனை நிறைவேற்றும் என நம்புகிறோம்" என்றார்.
அதிமுக அரசிடம் பாமக முன்வைத்த அந்த 10 கோரிக்கைகள் முழு விவரம்,
1. காவிரி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.
2. தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள்.
& கோதாவரி, காவிரி இணைப்புத் திட்டம்
3. இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.
4. ஏழு தமிழர்கள் விடுதலை.
5. படிப்படியாக மதுவிலக்கு.
6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.
7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.
9. வேளாண் கடன்கள் தள்ளுபடி
& உழவர் ஊதியக்குழு அமைத்தல்
10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.
இதில், ஏழு தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமான கோரிக்கை என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - AIADMK - PMK Alliance Talk Live Updates: 10 கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவுடன் இணைந்த பாமக! மக்களவையில் 7 இடங்கள் ஒதுக்கீடு!