நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ள நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை நேர்மறையான கருத்தாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். ரஜினியின் அறிவிப்பு பாரதிய ஜனதாவுக்கு எதிரானது கிடையாது. மத்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்சனையை தீர்த்தது யார்? என மக்களுக்கு தெரியும். எனவே நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ரஜினி கூறியிருப்பது போன்று அதிமுக அரசுதான் கோடை காலத்தில் கூட மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதனால் ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கும்.
திருமாவளவன்
ரஜினியின் அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி அறிவித்து இருப்பது அவரது தனித்தன்மையை குறிக்கிறது.
மேலும் படிக்க – நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்
கே.பாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி தெரிவித்திருப்பது அரசியல் செயல்பாடாக இல்லை. ரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. மத்தியில் நல்லாட்சி வந்தால்தான் தண்ணீர் பிரச்சனை தீரும். அதற்கு எங்கள் கூட்டணி மூலம்தான் தீர்வு கிடைக்கும்.
நல்லவர்களுக்கு ஆதரவு இல்லை என்றால் எதிரானவர்களுக்கு ஆதரவா? என புரிந்து கொள்ளப்படும். மத்தியில் நல்லாட்சி அமைந்தால்தான் மாநில அரசியலிலும் மாற்றம் கொண்டு வர முடியும்.
கே.பி. முனுசாமி (அதிமுக)
ரஜினி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தல்தான் எனது இலக்கு என்று கூறி இருப்பது அவரது முடிவு. ஆனால் அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். பிறகு தேர்தலை சந்திக்கலாம்.
அர்ஜுன் சம்பத்
ரஜினி அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று. 234 தொகுதிகளில் தனது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏற்கனவே அறிவித்த ஒன்று தான். நதிநீர் இணைப்பு என்பது அவருடைய கனவு. ரஜினி அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
ரஜினி கட்சி தொடங்கினால் எல்லா கட்சி தொண்டர்களும் அவர்களுடைய கட்சிக்கு வந்து விடுவார்கள். தமிழக வளர்ச்சி சரியில்லை. தமிழகத்தில் ஊழல் அரசியல் தான் நடக்கிறது. ரஜினி கட்சி ஆன்மீக கட்சியாகும்.
இவ்வாறு பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க – ‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி!