kavitha Iyer
Pollachi sexual abuses issue : பிப்ரவரி மாத இறுதியில், பொள்ளாச்சியில் மூன்றூ இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாக எடுக்க முற்பட்டதன் விளைவாக அம்மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரில் இருவர், அந்த பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் வெகு நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
ஊஞ்சவேலம்பட்டி என்ற ஊரில் இருந்து 5 கி.மீ தொலைவுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்த பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் மார்ச் மாத ஆரம்பத்தில் இவ்விவகாரம் பூதகரமாக வெடிக்க, மாணவர்கள், பெண்கள் அமைப்புகள் என அனைவரும் ஒன்று கூடி பெரும் போராட்டத்தை நடத்தி, தமிழக அரசினையே ஆட்டம் காண வைத்தனர்.
இந்த விவகாரம் மிகவும் பெரிதாக மாற, நான்கு நபர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், புகார் அளித்த பெண்ணின் பெயரையும் அம்பலமாக்கியது தமிழக அரசு.
Pollachi sexual abuses issue - மாணவர்கள் போராட்டங்கள்
கடந்த செவ்வாய் கிழமையன்று, விசாரணையை துரிதப்படுத்தவும், நடந்த கொடூர சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் வணிகர் சங்கங்கள், கடையடைப்பினை நடத்தினர். பெரிய அளவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே சிறிய சிறிய அமைப்புகளாக ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன போராட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 95,000 பேர் கலந்து கொண்டு மாபெரும் போராட்டத்தினை கடந்த ஞாயிறு நடத்த காவல்த்துறையே ஸ்தம்பித்தது.
ஆரம்பத்தில் மூன்று நபர்களை கைது செய்து , அவர்களின் அலைபேசிகளை பறிமுதல் செய்தது போலீஸ். அதில் பெண்களிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது மற்றும் அதனை மறைமுகமாக படம் பிடித்த வீடியோக்கள் என்று அவர்கள் செய்த கொடூரங்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தன. பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தான், இந்த பிரச்சனையின் மிக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். லீக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பரவ, பாலியல் இச்சைக்காக, பணத்திற்காக பெண்களை மிரட்டி வந்த கும்பலிடம் சிக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான பெண்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொண்டனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி வட்டாரத்தில் விசாரித்த போது, முதலில் அப்பெண்களிடம் முகநூல் வழியாக மிக நெருங்கிய நண்பர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வார்கள். பின்பு அவர்களின் விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். திருமணமான பெண்கள் சிலரும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்கவில்லை. ஒருவர் தன் மனைவியுடனைய வீடியோ வெளியாகமல் இருக்க பணம் கொடுத்த சம்பவமும் இங்கு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், சில வீடியோக்களை பார்ன் சைட்டுகளுக்கு அவர்கள் விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரங்கள் தொடர்பான ஆதரங்கள் ஏதும் இல்லை.
இது தொடர்பாக உதவி மையத்தில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இது வரையிலும் எந்த பெண்ணும் நேரடியாக வந்து புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களை ஏமாற்றுவது, அவர்களுடன் பழகி பணம் பறிப்பது போன்ற செயல்களை 2013ம் ஆண்டில் இருந்தே இவர்கள் செய்து வருகிறார்கள். புகார் அளித்த ஒரே பெண்ணின் அடையாளத்தையும் அரசு வெளியிட்டதால் மற்ற பெண்கள் முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த குற்றங்களை முன்வைக்க பயப்படுகின்றார்கள்.
திடீரென 600க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியான போது, பொள்ளாச்சியில் இருந்து இனி யாரும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று பேஸ்புக்கில் பதிவுகள் வெளியாகி வருகின்றன என்றும், இது போன்ற பிரச்சனைகளைப் பார்த்து பயந்த பெற்றோர்கள் விரைவில் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அவ்வூர் இளைஞர்களும் பெண்களும் கூறுகின்றனர்.
பொள்ளாச்சி மக்களின் கருத்து
குற்றவாளிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் திருநங்கைகளின் உரிமைக்காக போராடிவரும் கல்கி, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறிய போது, “இங்கு பாதிக்கப்பட்டவர்களையே தான் மீண்டும் மீண்டும் குறை கூறுகிறார்கள். அவர்கள் ஏன் ஆண்களுடன் வெளியே செல்கின்றார்கள், காரில் செல்கின்றார்கள், முகநூலில் ஆண்களுடன் ஏன் நண்பர்களாகின்றார்கள் என்று கேட்டுக் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்களைத் தான் பலவீனமாக்குகிறார்கள்” என்றார்.
பொள்ளாச்சி இளைஞர்கள் வெளியே சுற்ற விரும்பவில்லை என்றாலும் அவர்கள் டிண்டரில் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்பகுதியில் பார்ட்டிகள் நடப்பதையும் அவர்கள் மறுப்பதில்லை. விவசாய நிலங்களை கொண்டுள்ள பணக்கார குடும்பத்தின் வாரிசுகளுக்கு பரீட்சையமாக உள்ளது இந்த பழக்கங்கள். பொள்ளாச்சியில் இருந்த மருத்துவர் ஒருவர் கூறும் போது “இங்கு வெளிப்படையாக கஞ்சா அடிக்கும் இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
மூத்த பெண்நல மருத்துவர் சி.வி.கண்ணகி உத்ரராஜ் கூறுகையில், கலாச்சாரங்கள் மாற்றத்தின் விளைவுகள் இது. முன் காலத்துப் பெண்கள் படிக்கவில்லை. ஆனால் அவர்களின் பெண்களோ படிக்கின்றார்கள். ஸ்மார்ட்போன்களின் பழக்கங்கள் அதிகமாகின்றது. இதனை பெற்றவர்கள் சரியாக எப்படி கையாளுவது என்று கவலை கொள்கின்றனர். வெளிப்படையாகவும் உண்மையாகவும் இரு தரப்பும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளியான வீடியோக்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் என அனைத்து இடங்களிலும் வைரலாகியது. அப்பெண்களின் அழுகுரல்கள் நெஞ்சை உலுக்குவது போன்று தான் இன்றும் தோன்றுகிறது.
பொள்ளாச்சி பாப்பைரஸ் என்ற இணைய தள நிறுவனர்கள் சண்முகம் மற்றும் கீர்த்தனா பாலாஜி கூறுகையில், முன்பெல்லாம் பொள்ளாச்சி என்று தேடினால் எங்களின் ஊர் பற்றி ஒன்றுமே கூகுளில் வராது. இன்று பொள்ளாச்சி என்றாலே, என்றும் அழியாத களங்களை கூகுள் பட்டியலிடுகிறது என்று வருத்தப்பட்டனர்.
ஜமீன்தார்களும் குறுநில மன்னர்களும் வாழ்ந்து மறைந்த இம்மண்ணில் பழங்கால அரசின் காலச்சுவடு இல்லை. ஆனால் அவர்கள் அளித்துச் சென்ற நிலபுலன்களை இன்று இவ்வூர் இளைஞர்கள் அனுபவித்து வருகின்றார்கள். நெல் விவசாயம் செய்தார்கள். பின்பு அது தென்னை விவசாயமாக மாறியது. அவர்களின் வாழ்க்கைத் தரமும் மாறியது. இங்கு இருக்கும் அனைவரும் நல்ல செல்வந்தர்கள். வயற்காட்டில் அமர்ந்து ஹார்வேர்ட் பிசினெஸ் ரிவ்யூ படிக்கும் ஆட்கள். மாஸ்டெர் செஃப் பார்த்து சமையலறையில் சமைக்க விரும்பும் மக்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்மண் ஆடி காரை பார்த்தது இல்லை. ஆனால் இன்று இளைஞர்கள் பி.எம்.டபிள்யூவில் வலம் வருகிறார்கள். பள்ளிக் குழந்தைகள் கையில் டேப்ளட்டுடன் சுற்றி வருகின்றார்கள். அவர்களுடைய இணையதள நடவடிக்கைகள் பற்றி யாரும் பெரிதாக கண்டு கொண்டதாகவே இல்லை.
அரசியல் தொடர்பு :
பெரிய அளவில் விவசாயம் செய்கின்றார்கள். தொழில் நடத்துகின்றார்கள். கட்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். அதனால் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பது ஆச்சரியத்தை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. நக்கீரன் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை இந்த பிரச்சனையோடு தொடர்புள்ளவர்களாக அறிவித்தார். அதிமுகவின் உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். திருநாவுக்கரசு கூறும் போது, பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் என்னுடன் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் இருந்தார் என்று ஒப்புக் கொண்டார்.
ஆனால் திமுக போராட்டம் நடத்தியது. ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கடந்த சில வருடங்களில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பெண்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்பான உரிய விசாரணையை மேற்கொள்ளுங்கள் என்று தொடர்ந்து போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக கட்சிகள் பங்கேற்றன.
மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் கூறுகையில், ஏற்கனவே மத்தியில் ஆளும் பாஜக மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. இந்த கூட்டணி நிச்சயமாக மக்கள் மத்தியில் ஒரு எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும். செவ்வாய் கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் பாமக, சிபிஎம் கட்சிகளும் பங்கேற்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் என்ன கூறுகிறார் ?
முக்கிய குற்றவாளிகளான சபரிராஜ் மற்றும் திருநாவுக்கரசு இருவரையும் கட்டைகளால் தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகியது. திருநாவுக்கரசு பணம் வட்டிக்குவிடும் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய ஊர் சின்னாம்பாளையம். மற்ற இருவர்கள் மாக்கினாம் பட்டி மற்றும் அச்சிப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அப்பெண்ணின் வழக்கறிஞர் கோவையைச் சேர்ந்த கோபால்கிருஷ்ணன்.
நாங்கள் புகார் பதிவு செய்ததன் நோக்கம், மற்ற பெண்களும் தைரியமாக முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கூற வேண்டும் என்பது தான். செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் க்ளௌட்டோடு இணைக்கப்பட்டிருக்கும் அந்த அக்கௌண்ட்களை செக் செய்தால் தான் எத்தனை வீடியோக்கள் உள்ளன என்பதை அறிய முடியும் என்று கூறினார். திருநங்கைகளுக்கான சமூக நெறிபாட்டாளர் கல்கி, அவ்வூர் பெண்கள் மத்தியில் இது போன்ற சூழல் ஏற்பட்டால் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
வழக்கு கடந்து வந்த பாதை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பகுதியில் 90,180 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1000 ஆண்களுக்கு 1012 பெண்கள் வாழ்கின்றனர். எழுத படிக்க தெரிந்தவர்களின் சதவீதம் 89.85 ஆகும். ஆண்கள் 93.89% பெண்கள் 85.88%.
எழில் கொஞ்சும் அழகுடன் காணப்பட்டதால் பொழில்வாய்ச்சி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஊர் பிற்காலத்தில் பொள்ளாச்சி என்று மறுவியது. திரைப்படங்கள் எடுக்க ஏற்ற இடமாக இது இருப்பதால் குட்டி கோடம்பாக்கம் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஊர் இது.
பிப்ரவரி 12 : சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசு இருவரையும் முகநூல் மூலமாக அறிந்த பெண் தாக்குதலுக்கு ஆளாகிறார்.
பிப்ரவரி 24 : சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் மீதும் ஐ.பி.சி. 543 ஏ மற்றும் பி, 394, 66ஈ, மற்றும் தமிழ்நாடு பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பின்பு இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது.
பிப்ரவி 27 : புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மற்றும் வசந்தகுமார் ஆகியோரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்கிறார்கள்.
மார்ச் 1 : கோவை எஸ்.பி. பாண்டியராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு
மார்ச் முதல் வாரம் : பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் லீக் ஆகின்றன
மார்ச் 7 : திருநாவுக்கரசு மீண்டும் கைது செய்யப்படுகிறார்.
மார்ச் 11 : லீக்கான வீடியோவை ப்ளர் செய்து, அந்த வீடியோவிற்கான செய்தியை மக்கள் மத்தியில் சேர்க்கிறார் நக்கீரன் ஆசிரியர் கோபால். அதில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார்.
மார்ச் 11-13 : நக்கீரனின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு கூறுகிறார். பார் நாகராஜன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார்.
மார்ச் 12 : இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு கை மாறுகிறது.
மார்ச் 13 : காவல்த்துறையின் அனுமதி மறுத்த பின்பும் திமுக சார்பில், கனிமொழி தலைமையில் போராட்டம் நடக்கிறது. காங்கிரஸ், மதிமுக,மற்றும் இடதுசாரிகள் பங்கேற்கின்றனர்.
மார்ச் 13 :சிபிஐக்கு வழக்கு மாற்றப்படுகிறது. அரசு உத்தரவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் முழு விபரமும் வெளியிடப்பட்டது.
மார்ச் 14: பார் நாகராஜனின் டாஸ்மாக் கடை உள்ளூர்வாசிகளால் அடித்து நொறுக்கப்படுகிறது.
மார்ச் 15 : பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்.பி.பாண்டியராஜன் மீது பொதுநல வழக்கு பதியப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.