பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்ஸோ) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் பகிர்ந்து வருபவர்களை தமிழ்நாடு காவல்துறை அதிரடியாக கைது செய்து வருகிறது.
மேலும், சிறுவர் பாலியல் வல்லுறவு வீடியோக்களை பகிர்ந்து வரும் 1500க்கும் மேற்பட்ட ஐபி முகவரிகளை கண்காணித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி ரவி ,சிறுவர் ஆபாச படங்களை தங்களது செல்போனில் வைத்திருந்தாலும் சட்டம் பாயும், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக உள்ளது என்று கூறிய ஏடிஜிபி, குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2020 ஜனவரி 23ம் தேதி காலவரையிலான கடந்த 5 மாதங்களில், இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆபாச பட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டில்லி முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், விவரங்களுக்கு : 5 மாதங்களில் 25 ஆயிரம் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் : இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை