Postal Votes Probe : நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அளித்த தாபல் வாக்குகள் முறையாக விதிகளின் படி நிரப்பப்பட்டதால் 12 ஆயிரத்து 915 வாக்குகள் நிராகரிக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையை அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தலை நியாமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும், ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விட கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. சிறு காரணங்களுக்காக கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களான காவல் துறையை சேர்ந்தவர்கள் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அரசு ஆசிரியரகள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை..
ஆங்கில நாளேடு ஒன்றில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளது. இதன்மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும். இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்த போது, ஒவ்வொரு வாக்களனின் வாக்கும் முக்கியமானது என்றும் மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எத்தனை தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில் மனுவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரம் 3 பேருக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொகுதி, பாகம் எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை சரியாக குறிப்பிடாத மற்றும் தேர்தல் ஆணைய டேட்டாபேஸுடன் பொருந்தாத 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒன்றரை லட்சம் வாக்குகள் மொத்தமாக விடுபட்டது என்பது தவறான குற்றச்சாட்டு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதுடன், தபால் ஓட்டுக்கள் பதிவில் இதுபோன்ற விடுபடுதல்களோ, குழப்பங்களோ நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க : நேர்மைக்கும் பொறுமைக்கும் நிகழும் அக்னிப்பரீட்சை இது… வன்முறையில் இறங்காதீர்கள் – கமலின் அன்பு வேண்டுகோள்