2016 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் எச்ஐவி தொற்று அதிகமாகியுள்ளது : டாக்டர் ரவீந்திரநாத் பகீர் தகவல்!

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்

விருதுநகரில் எச்ஐவி கிருமி தொற்று உள்ள இரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றிய நிகழ்விற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுசெயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் தான் விருதுநகரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட மாபெரும் துயரம். ரத்தத்தானம் பெற்ற பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்துடன் சென்று புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில், தவறுதலாக எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியுள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுசெயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ தமிழக அரசின் அலட்சியப் போக்கும்,மக்கள் நலனில் அக்கறை இல்லாத போக்குமே இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற நிகழ்விற்குக் காரணம்.தமிழக அரசு தேசிய இரத்த தான கழகத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் செயல்பட வில்லை.

அப்பரிந்துரையின் அடிப்படையில் இரத்த வங்கிகளில் ஊழியர்களை நியமிக்க வில்லை.நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தவில்லை.அவசியப் படும் இரத்தக் கூறுகளை மட்டும் பயன் படுத்தும் நடைமுறையை செயல் படுத்த வில்லை.

இரத்த வங்கிகளின் தரத்தை மேம்படுத்த வில்லை.தேசிய அளவில் 2002 ஆம் ஆண்டே இரத்தக் கொள்கை உருவாக்கப்பட்டும், பாதுகாப்பான இரத்த திற்கான செயல் திட்டம் (Action Plan for blood safety ) 2007 ல் உருவாக்கப்பட்டும் அவை எதையும் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை.

HIV தொற்றை 5 நாட்களுக்குப் பிறகு உடனடியாக கண்டு பிடிக்கக்கூடிய நவீன NAT -ID பரிசோதனை சாதனங்களை தமிழக அரசு வழங்க வில்லை.இரத்த வங்கிகளின் செயல்பாட்டில் பொறுப்பற்ற முறை நீடிப்பதை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

இரத்த சோகைக்கான சிகிச்சைக்கு சரியான வழிகாட்டு முறைகளை உருவாக்கவில்லை.இரத்தம் வழங்கும் சிகிச்சை முறைகளில் உலக நல நிறுவனத்தின் பரிந்துரைகளையும், மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவில்லை. அதாவது , இரத்தம் வழங்கும் சிகிச்சையில் (blood transfusion) 90 விழுக்காட்டை இரத்தக் கூறுகளாக ( components) வழங்க வேண்டும் ,மீதி 10 விழுக்காடு அளவிற்குத்தான் முழு இரத்தம் ( whole Blood) வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை.அதற்கு மாறாக, இந்தியாவிலும் தமிழகத்திலும் 80 விழுக்காடு அளவிற்கு முழு இரத்தமே ஏற்றப்படுகிறது.

இரத்தத்தை ,இரத்தக் கூறுகளாக ஏற்றும் பொழுது பல்வேறு நோய் தொற்றை குறைக்க முடியும்.இந்த பரிந்துரையை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தாது கண்டனத்திற்குரியது.
மக்கள் நலனுக்கு எதிரானது.

அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவும் மருந்துகள் ,தடுப்பு மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஒப்பந்தம் மற்றும் வெளிக் கொணர்தல் முறையில் ஊழியர்களை நியமிப்பதை கைவிட வேண்டும்.

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV தொற்று உள்ள இரத்தம் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் குருதி ஏற்று மருத்துவ நிபுணர்களை அதிக அளவில் போடாதது சரியல்ல.விசாரணை என்ற பெயரில் தமிழக அரசு கண் துடைப்பு நாடகத்தை நடத்தக் கூடாது.

எய்ம்ஸ்,ஜிப்மர் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களை இக்குழுவில் இணைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 1 கோடிக்கும் குறைவில்லாமல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும்.

அவருக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு HIV தொற்று ஏற்படாதவகையில் கூடுதல் கவனத்துடன் பிரசவம் பார்க்கவும், சிகிச்சைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரத்ததானம் வழங்குவோருக்கு HIV கிருமி போன்ற தொற்று இருந்தால் ,இரத்த தானம் வழங்கியவரை கண்டுபிடித்து ,நேரில் சென்று அவருக்கு தகவலை சொல்வதுடன் ,
கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைகளை வழங்க வேண்டும்.இதில் தமிழக அரசு தவறிழைத்து வருகிறது.இந்த நடைமுறை கடைபிடிக்கப் பட்டிருந்தால் ,சாத்தூர் சம்பவம் நிகழ்ந்திருக்காது.
தமிழக அரசின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம்.

அவசியமின்றி இரத்தம் ஏற்றப்படுவதை தடுக்க வேண்டும்.இந்தியாவிலும், தமிழகத்திலும் HIV தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2016 க்குப் பிறகு அதிகரிப்பது கவலை அளிக்கிறது.

HIV/AIDS தடுப்பிற்கான நிதியை மத்திய அரசு குறைத்ததே இதற்குக் காரணம்.

ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி, ரத்த வங்கி ஊழியர்கள் டிஸ்மிஸ்

எனவே,HIV தடுப்புக்கான நிதியையும்,AIDS நோயாளிகளுக்கான நிதி உதவியையும் மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.தமிழக அரசும் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close