புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளை, முதன்முறையாக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து புதுச்சேரி அரசு பள்ளி மாணவிகள் பார்த்து, முதல்வர் அமைச்சர் பெருமக்கள் பேசுவதை கண்டு களித்தனர்.
Advertisment
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. நேற்று 13 ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 4-ம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வந்தனர்.
ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போதும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் அதிகாரிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வந்தால் அவர்கள் பேரவை நிகழ்வுகளை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை பார்ப்பதற்காக முதன்முறையாக புதுச்சேரி திருவள்ளுவர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் பார்வையாளர்கள் வளாகத்திற்கு உள்ளே உள்ள பார்வையாளர்கள் அறையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக அரசு பள்ளி மாணவிகள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரில் அமர்ந்து பார்த்து கண்டு ரசித்தனர். பின்பு சட்டப்பேரவை தலைவர் செல்வம் அவர்களின் அறையை சுற்றி பார்த்தனர். அங்கு சட்ட பேரவை தலைவர் செல்வம் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சட்ட பேரவை புத்தகத்தை பரிசாக வழங்கினார். அப்போது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், கல்வித்துறை செயலாளர் ஜவகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil