Puducherry police arrested hooligan Joseph : புதுச்சேரி மாநிலத்தில் புதிய டி.ஜி.பியாக பதவியேற்றிருக்கிறார் பாலாஜி ஸ்ரீவத்சவா என்ற அதிகாரி. அம்மாநிலம் முழுவதும் உள்ள ரௌடிகள் நிலை குறித்து அறிந்து தகவல் தர வேண்டும் என்று அனைத்து காவல்நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரிக்கலாம்பாக்கம் என்ற பகுதியில் அமைந்திருக்கும் புறக்காவல் நிலைய அதிகாரிகள் நேற்று முன் தினம் (30/09/2019) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, சிதம்பரம் பகுதியில் பெட்ரோல் பேங்க் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற ஜோசப் மற்றும் அவருடைய நண்பர் ரோஸ் அய்யனார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் இருவர் மீதும் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் எப்படி இங்கே வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி விசாரணை செய்தனர்க் காவல்துறையினர். ஆத்திரமடைந்த இரு ரௌடிகளும் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் வீடியோவாக ரெக்கார்ட் செய்து சமூகவலைதளங்களில் பதிவேற்ற அந்த விவகாரம் வைரலானது.
மேலும் படிக்க : வைரல் வீடியோ : காவல் துறையினரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பிடிபட்டார்..
அந்த இரண்டு ரௌடிகள் மீதும் கொலை முயற்சியில் ஈடுபடுதல் (307), காவலர்களை அவர்கள் பணியில் ஈடுபடவிடாமல் தடுத்தல் (353) உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அவர்கள் இருவரையும் பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தப்பிச் சென்ற இரண்டு ரௌடிகளில் ஜோசப் ஏம்பலம் அருகே உள்ள ஆலமரத்துக்குப்பம் பகுதியில் தலைமறைவாக இருக்கிறார் என்று அறிந்த காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய முற்பட்ட போது ஜோசப் தப்பிக்க முயற்சி செய்ததாகவும், அதில் கீழே விழுந்ததில் ஜோசப்பின் வலது கையும் இடது காலும் முறிந்ததாகவும் கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஜோசப்.
ஏற்கனவே 'புள்ளிங்கோ’, 'ரூட்டு தலைன்னு' கொஞ்சம் பேர் காவல்நிலையம் சென்று திரும்பிய போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டுடன் வெளியே வந்தது தமிழக காவல்த்துறை வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது. தற்போது புதுவை மாநில காவலர்களும் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.