புதுச்சேரியில் ரூ2 கோடி மதிப்பு வீட்டை அபகரித்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி; மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை

வாடகை வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் காலியும் செய்யாமல் கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியின் செயல் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

police
police

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளரின் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரித்த மகளிர் காங்கிரஸ் நிர்வாகி,  வீட்டை காலி செய்ய மறுத்து போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி கோரிமேடு பேட்டையான் சத்திரம் காமராஜர் சாலையில் வசித்து வருபவர் ஜிப்மரின் ஓய்வு பெற்ற கண்காணிப்பு செவிலியர் ஜோதீஸ்மதி (77). இவருக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3600 சதுர அடி கொண்ட இவரது வீட்டில் அப்போதைய பா.ம.க மகளிர் அணியை சேர்ந்த வரலட்சுமி இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: ‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான்; மன்னிப்பு கேட்கிறேன்’: யூடியூபர் மாதேஷ் வெளியிட்ட வீடியோ

தற்போது புதுச்சேரி காங்கிரஸில் தட்டாஞ்சாவடி தொகுதி தலைவியாக உள்ள வரலட்சுமி 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை வாடகை கொடுத்தவர், அதன் பிறகு வாடகை தரவில்லை. இதனை கேட்டதற்கு 77 வயதான ஜோதீஸ்மதிக்கு வரலட்சுமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள அவரது மகன்கள் ஜோதீஸ்மதியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றதுடன் வீட்டுக்கான அதிகாரத்தை உறவினரான விஜயகுமாருக்கு அளித்தார். அன்று முதல் இன்று வரை விஜயகுமாரின் பராமரிப்பிலே அந்த வீடு இருந்து வருகிறது மேலும் வாடகையும் கொடுக்காமல் வீட்டை காலி செய்ய மறுத்தும் உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்து வீட்டை அபகரிக்க முயன்ற வரலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 16ஆம் தேதி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வரலட்சுமியை காலி செய்து உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் அமீனா வீராசாமி, கிராம நிர்வாக அதிகாரி சிவபாலன் மற்றும் தன்வந்தரி நகர் போலீசார் வரலட்சுமி வீட்டிற்கு சென்று கோர்ட் உத்தரவு காட்டி வீட்டை காலி செய்யும்படி கூறினார்.

ஆனால் வீட்டிற்குள் அதிகாரிகளையும் போலீசாரையும் நுழைய விடாமல் தனது சகாக்களுடன் போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரு வழியாக வீட்டில் உள்ளே புகுந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டில் உள்ள பொருட்களை ஆட்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்தது. வாடகை வீட்டுக்கு வாடகை கொடுக்காமல் காலியும் செய்யாமல் கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியின் செயல் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வீட்டில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்திய போலீசார் வீட்டிற்கு வேறு ஒரு பூட்டை போட்டு பூட்டி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry police recover house from congress functionary

Exit mobile version