கடந்த சில நாட்களுக்கு முன் மதன் ரவிச்சந்திரன் தமிழின் பிரபல யூடியூபர்கள் தெரிவித்த தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டார்.
இந்த வீடியோக்களில் பிரபல யூடியூபர்கள் ஐயப்பன் ராமசாமி, முக்தார், மாதேஷ் உள்ளிட்டோர் பிரபல அரசியல் கட்சிகளிடம் பணம் மற்றும் கிப்ட் பொருட்களை பெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. மேலும் அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து தெரிவித்த கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன. சில நாட்களாக இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்: இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது
இந்தநிலையில், யூடியூபர் மாதேஷ் வீடியோ தொடர்பாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 5 நாட்களாக வெளிவரும் வீடியோக்களை நான் பார்த்துட்டு இருக்கேன். அந்த வீடியோவில் இருப்பது நான் தான். இதெல்லாம் கடந்த வருடம் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த சந்திப்பு. நான் அலுவலகத்தில் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு சேனலின் ஊடகவியலாளர் மூலம் ஒரு நிறுவனத்தில் இருந்து வணிக ஆலோசகர் வருகிறார், இங்கிருக்கும் முக்கிய ஊடகவியலாளர்கள் வருகிறார்கள், நீங்களும் வர வேண்டும், உங்கள் பெயரையும் அவங்க சொன்னாங்க என அழைப்பு வந்தது. நான் அவர்களைப் பற்றிக் கேட்டப்போது முக்கிய நிறுவனம் தான், நேரில் வாங்க பேசிக்கலாம் என்று அழைத்தார்கள்.
நான் அங்கு போனேன், அவர்களுடன் முதன்முறையாக அறிமுகமானேன். தேர்தலில் வேலை செய்ய வேண்டும் என சொன்னார்கள். அங்கு பேசியதை நீங்கள் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். அப்புறம் பணம் கொடுத்தாங்க. நீங்க இங்கு வந்ததற்காக தருகிறோம் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதனை நான் வாங்கிக் கொண்டேன். பின்னர் சில பெயர்களைக் கொடுத்து இவர்களையெல்லாம் அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள். நான் அவர்களை எல்லாம் அழைத்து போனேன். மத்ததையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
நான் நிதானம் இல்லாமல் செய்து விட்டேன். எங்கள் வீட்டில் கடினமான சூழ்நிலை உள்ளது. என்னுடைய 2 வயது குழந்தையிடம் நிம்மதியாக விளையாட முடியவில்லை, நான் உடைந்து போயிருக்கேன். குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் வீடியோவில் பேசியது தவறு தான். அரசியல் கட்சி தலைவர்களைப் பற்றி பேசியது எல்லாம், நான் மிகைப்படுத்தி சொல்லிட்டேன். பிஸினஸூக்காக அப்படி பேசிட்டேன். மக்களிடம் பெரிய மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil