புதுச்சேரியில் மொத்தமுள்ள 280 கி.மீ. தூரமுள்ள சாலைகள் அனைத்தும் செப்பனிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது என்றும் ஓரிரு மாதங்களில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு விடும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சார்பில் வில்லியனூர்- ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.90 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம், சாலைகள் மற்றும் பக்க வாய்க்கால்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்வர் ரங்கசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மேம்பாலத்தின் மேல்தளத்தினை தூண்களில் நிறுவும் பணியை முதல்வர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் புதிய 24 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் வருகை: மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு
அப்போது தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான தேனீ. ஜெயக்குமார், பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்து பாலத்தின் கட்டுமான பணிகள் குறித்து தெரிவித்தனர்.
பணிகளை விரைந்து முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், புதுச்சேரியில் உள்ள 280 கி.மீ. தூரமுள்ள சாலைகள் அனைத்தும் செப்பனிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. இது வரை 140 கி.மீ. தூர சாலைகளில் பணிகள் முடிந்து விட்டன. ஓரிரு மாதங்களில் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு விடும்.
இதே போல் நகரின் உட்புற சாலைகள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

புதுச்சேரியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அனைத்து நலத்திட்டங்களையும் தடையின்றி செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தலைவிக்கு அறிவிக்கப்பட்ட மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் 11,000 பேருக்கு போய் சேர்ந்துள்ளது. மேலும், 25,000 பேருக்கு அடுத்து வழங்க இருக்கிறோம். அரசின் கணக்கெடுப்பிபடி 70,000 பேர் இத்திட்டத்தில் பயனடைவார்கள். காரைக்கால் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கிடும் பணி நடைபெற்று வருகின்றது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil