புஷ்கர விழா 2018 : புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை தைபூச படித்துறை, குறுக்குதுறை ஆகிய இடங்களில் புனித நீராட விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என மாவட்ட ஆட்சியர், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் விழா நடைபெறுவது. இந்த விழா வரும் அக்டோபர் 12 முதல் 23 ஆம் தேதி வரை புஷ்கரம் விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற உள்ளது. இதை ஒட்டி, திருநெல்வேலியில் உள்ள இரண்டு இடங்களில் புனித நீராட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
புஷ்கர விழா 2018 : 140 இடங்களுக்கு அனுமதி
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்து, விழாவை பாதுகாப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த புலவர் மகாதேவன் என்பர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்
நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும் தைபூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்தது சட்டவிரோதமானது எனவும், நீராடும் பக்தர்களை கட்டுப்படுத்துவதை விடுத்து ஒட்டுமொத்தமாக தடை விதித்தது தவறு எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராட வருவர் என்பதால் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தாமிரபரணி கரையில் 140 இடங்களில் நீராட முடியும் என்பதால் அனைவரும் தைப்பூச படித்துறைக்கு வருவர் எனக் கூறமுடியாது.
அதே போல, குறுக்குத்துறையில் மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர்கள் பலியான சம்பவத்தையும் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த சம்பவம் காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் நிகழ்ந்தது எனவும், புனித நீராடும் போது நடைபெறவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார். வாகனங்கள் நிறுத்த இடமில்லை என்பன போன்ற சாதாரண காரணங்களைக் கூறி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். எனவே இந்த இரண்டு இடங்களில் புனித நீராட விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
தைப்பூச படித்துறை மற்றும் குறுத்துறை படித்துறையில் நீராட அனுமதி மறுப்பு
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலைத்துறை மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகாராஜன், தைப்பூச படித்துறை செல்லும் பாதை என்பது குறுகிய ஒருவழிப்பாதையாக உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடுவதால் அவர்களுக்கான பாதுகாப்பு அளிப்பதிலும் சிரமம் ஏற்படுத்தும் மேலும் அந்த படித்துறை என்பது வெறும் 80 பேர் மட்டுமே நிற்கக் கூடிய அளவிலான சிறிய பழமையான படித்துறை ஆகும்.
மேலும் படிக்க : புஷ்கர விழா என்பது என்ன? எதற்காக கொண்டாடப்படுகிறது?
எனவே பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனுமதிக்கபடவில்லை. மேலும் தைப்பூச படித்துறை ஒட்டி உள்ள நீர் பகுதியில் சூழல் அதிகளவில் உள்ளதால் விபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் மேலும் வரக்கூடிய காலங்கள் பருவ மழைக்காலம் என்பதால் ஆற்றில் நீர் அதிகளவில் வரும்பொழுது அதனால் போதுமான அளவிற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதேபோன்று குறுக்குத்துறை படித்துறையில் அதிக அளவில் நீர் சூழல் உள்ளதால் அங்கு பக்தர்கள் குளிப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதியே அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இரண்டு இடங்களிலும் அனுமதிக்க முடியாது எனவும் இதைத் தவிர 140 இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டங்களிலும் இதே முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
விசாரணை ஒத்தி வைப்பு
இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த இரண்டு இடங்களில் புனித நீராடி அனுமதி மறுத்துத்து மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு முறையானதாக இல்லை. மேலும் அதற்காக கூறிய காரணங்கள் சொற்ப காரணங்களாக உள்ளதால் இதனை நீதிமன்றம் ஏற்க கூடாது எனவே இரண்டு இடங்களிலும் புனித நீராட பொதுமக்களுக்கு அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக தெரிவித்த நீதிபதி ஆர். மகாதேவன் விசாரணை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.