ரகுபதி விசாரணை ஆணையம் ரத்து: தனியார் பங்களாக்களில் ஆணையங்கள் இயங்கவும் தடை

'ரகுபதி ஆணையத்துக்கு வழங்க கூடிய நிதி மற்றும் சலுகைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.'

Raghupathi Inquiry Commission Controversy: ரகுபதி விசாரணை ஆணையத்தை சஸ்பெண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய தலைமை செயலகம் முறைகேடு புகாரை விசாரித்த ஆணையம் இது.

நீதிபதி ரகுபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடை விசாரிக்க அமைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் கட்டியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி ரகுபதியை நியமித்து தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

3 ஆண்டுகள் செயல்படாத ரகுபதி கமிஷனுக்கு 2 கோடி ரூபாய் செலவு!

இது தொடர்பான புகாரை விசாரித்த ரகுபதி ஆணையம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பியது. கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அனுப்பிய சம்மனை எதிர்த்தும், ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். ஆணையம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரகுபதி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி ஆணையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 3) நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் அவ்வாறு தடை நீக்கப்பட்டால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் ஏதும் அனுப்பப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ரகுபதி ஆணையம் ஒரு தலைப்பட்சமாகவும் உள்நோக்கத்துடனும் செயல்படுவதாகவும், மேலும் ஆணையம் விசாரணை ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க வில்லை எனவும் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி இல்லை என உத்தரவிட்டு விட்டு உள்ளது ஒருதலைபட்சமானது. எனவே இந்த ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை எனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது. இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட வேண்டும் என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ரகுபதி ஆணையத்துக்கு வழங்க கூடிய நிதி மற்றும் சலுகைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். ரகுபதி ஆணையம் புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அனைத்து விசாரணை ஆவணங்களையும் இரண்டு வாரத்தில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த ஆவணங்களில் குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு குற்ற நடவடிக்கைகளை தொடரலாம். செயல்பாட்டில் இருக்கும் விசாரணை ஆணையங்கள் அவசியமா? என்பதை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். அப்படி அவசியம் என கருதும் ஆணையத்திற்கும், இனி எதிர் காலத்தில் அமைக்கப்படும் ஆணையத்திற்கும் காலக்கெடு நிர்ணயம் செய்து அரசு செயல்பட வேண்டும்.

அரசு கட்டிடங்களில் இயங்காமல் பங்களாக்களில் இயங்கும் ஆணையங்களை அரசு கட்டிடங்களுக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும் என நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டு கூடுதல் மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close