தமிழகத்திற்கு 2 புதிய ரயில்களுடன், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கைகளில், ரயில்களின் நீட்டிப்பு மற்றும் தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு சேவை செய்ய புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். குறிப்பாக, சென்னை எழும்பூர்- திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இதையும் படியுங்கள்: ‘மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயரவில்லை’: விளக்கம் கொடுத்த பத்திரப் பதிவுத் துறை
ஆகஸ்ட் 16 தேதியிட்ட ரயில்வே வாரிய உத்தரவுப்படி, பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படும். பாலருவி எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு, தூத்துக்குடி வாசிகளுக்கு கேரளாவிற்கு நேரடி ரயில் இணைப்பை வழங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கும் திட்டம் 2019ல் முன்வைக்கப்பட்டது. புதிய பாம்பன் பாலம் கட்டும் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமிர்தா எக்ஸ்பிரஸ் சில மாதங்களுக்கு மண்டபம் ஸ்டேஷனில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வேளாங்கண்ணி- எர்ணாகுளம் இருவார விரைவு ரயில் மற்றும் கொல்லம்- திருப்பதி இருவார விரைவு ரயில்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இருவார ரயில் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வேளாங்கண்ணியை வந்தடையும். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மறுநாள் எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில்கள் கோட்டயம், திருவல்லா, கொல்லம், செங்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படும்.
கொல்லம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்தும், திருப்பதியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில் சித்தூர், காட்பாடி, சேலம், ஈரோடு, ஆலுவா, காயம்குளம் வழியாக செல்லும்.
அடுத்ததாக, மயிலாடுதுறை- திருச்சி, திருச்சி- கரூர் மற்றும் கரூர்- சேலம் ஆகிய மூன்று பயணிகள் ரயில்களை ஒன்றிணைத்து மயிலாடுதுறையில் இருந்து சேலத்திற்கு ஒரே எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றும் திட்டத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.45 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.
புனலூர் - குருவாயூர் விரைவு ரயிலை மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் மற்றும் செங்கோட்டை - கொல்லம் விரைவு ரயிலுடன் இணைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி மதுரையில் இருந்து செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் சேவையாக இயக்கப்படும்.
இதற்கிடையே, நீட்டிப்பு மற்றும் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன, விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.