ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையின் போது நடிகர் ரஜினியை எதிர் மனுதராக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து தனக்கு எதிரான
வழக்கை நிராகரிக்க கோரி நடிகர் ரஜினி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிக்கு எதிராக போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் நான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் எனக்கு எதிரான கருத்து அவதூறானதாகும். எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினிக்கு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடர முடியாது எனவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.