ரஜினியின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால், கஜ புயலின் பாதிப்பால் டெல்டா பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வழக்கமான கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பேட்ட டீசர் நேற்று வெளியானது. டயலாக்கே இல்லாமல் வெளியான இந்த டீசரில் விண்டேஜ் ரஜினியை பார்க்க முடிந்தது.
வழக்கமாக, சில காரணங்களுக்காக தனது பிறந்தநாளின் போது தமிழகத்தில் இருப்பதையே தவிர்த்துவிடும் ரஜினி, இம்முறையும் முகேஷ் அம்பானி மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள மும்பை சென்றிருந்தார்.
இன்று மும்பையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, போயஸ் கார்டனில் தனது இல்லம் முன்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய அரசு கூறுகிறது. அது உண்மைதானா என்பதை சரி பார்க்க வேண்டும். அப்படி இல்லையெனில், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் இதற்கு ஒரே வழி” என்றார்.
தொடர்ந்து பேசிய ரஜினி, “பேட்ட படம் ரிலீசான பிறகு அடுத்தப் படம் குறித்து யோசிக்கலாம். பேட்ட டீசர் நல்ல வரவேற்புப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகியது குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. ஆகவே, அதுகுறித்து பேசுவதில் ஒன்றுமில்லை. ஐந்து மாநில தேர்தல் குறித்து எனது கருத்தை நான் முன்பே தெரிவித்துவிட்டேன்” என்றார்.
ரங்கராஜ் பாண்டே உங்கள் கட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் பரவுகிறது. அது உண்மையா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ‘அது உண்மையான தகவல் இல்லை, வதந்தி மட்டுமே’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க – ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்த ரஜினியின் கருத்து