இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேச்சியது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனுவிற்கு பதில் அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துக்ளக் 50 ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் பேரணி நடந்தது என்றும் அப்போது நிர்வாண நிலையில் இந்து கடவுள் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கிச் செல்லப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இவரது பேச்சு இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதாகவும், எனவே, ரஜினிகாந்த் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார். இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை காவல் ஆணையரிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி புகார் அளித்தார்.
மேலும் படிக்க : ராமர் – பெரியார் – ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?
அவரும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், போலீசில் புகார் கொடுத்து விட்டு காத்திருக்காமல் முன்கூட்டியே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார். இந்த நிலையில், சென்னை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக உமாபதி வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஜனவரி மாதம் திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பொய்யான தகவலை கூறியுள்ளார். இதன்மூலம் இரு பிரிவினர்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி மோதலை ஏறபடுத்ம் விதமாக செயல்பட்டுள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் உடனடியாக புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை, மனு குறித்து சென்னை , காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வருகிற 7 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். விசாரணையை 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும் படிக்க : இந்த வருடம் ஹோலி கொண்டாடமாட்டேன்... மோடியின் முடிவுக்கு காரணம் என்ன?