Man Vs Wild : முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! நாளை மீண்டும் காட்டுக்குள் செல்வாரா ரஜினி?
பந்திப்பூர் வன உயிரினங்கள் சரணாலயத்தில் பணியாற்றிய வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Rajinikanth in Man Vs Wild first schedule of shooting done : உலக புகழ்பெற்ற வனவியல் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று இங்கிலாந்து முன்னாள் ராணுவ வீரர் பியர் கில்ஸ் நடத்தும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஏதேனும் தவிர்க்க இயலாத காரணங்களால் காடுகளில் தனித்து விடப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று பியரிடம் இருந்து அறிந்து கொள்வார்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபமா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்றார். அந்த வரிசையில் பங்கேற்றார் நடிகர் ரஜினி காந்த். கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பந்திப்பூர் சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்றைய சூட்டிங்கின் போது பெரிய அளவில் காயம் ஏற்பட்டதால் அவர் சென்னை திரும்பியதாக பல தகவல்கள் வெளியாகின. நேற்று இரவு 10:30 மணிக்கு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்ட போது, பெரிய காயம் ஏதும் இல்லை. முட்புதரில் இருந்த முள் ஒன்று குத்திவிட்டது. அதனால் தான் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் கர்நாடக வனத்துறையினர் 2 நாட்கள் மட்டுமே காட்சிகளை படமாக்க அனுமதி அளித்தனர். 28ம் தேதி முதற்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ளது. அடுத்து 30ம் தேதி தான் மீண்டும் அனுமதி. அதனால் சென்னை திரும்பிவிட்டதாக அவர் கூறினார்.
30ம் தேதிக்குள் அவருடைய காலில் பட்ட காயம் ஆறிவிட வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்று இந்த நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பான படிக்கல்லை தர வேண்டும் என்றும் ரஜினியின் ரசிகர்கள் ஆர்த்மார்த்தமாக வேண்டி வருகின்றனர். பந்திப்பூர் வன உயிரினங்கள் சரணாலயத்தில் பணியாற்றிய வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.