முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைவாசம் பெற்று வந்த நிலையில் அரசியல் கட்சியினரின் வலியுறுத்தல் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறையில் இருந்த 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அந்த வகையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் நேற்று முன்தினம் உத்தரவிட்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பரோலில் இருந்த நளினி, போலீஸார் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கு நேற்று மாலை 4 மணியளவில் திரும்பினார். அங்கு விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட நளினி, 30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார்.
இதையும் படியுங்கள்: தீவிர கண்காணிப்பில் செம்பரம்பாக்கம் ஏரி; அசம்பாவிதம் ஏற்படாது – துரைமுருகன் உறுதி
சிறை வளாகத்தில் இருந்த சகோதரர் பாக்யநாதனுடன் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள கணவர் முருகனை நளினி கண்ணீர்மல்க சந்தித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த முருகன், சாந்தனுடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த வழக்கில் நளினி மற்றும் ரவிச்சந்திரனை தவிர முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும் இந்தியாவில் அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது என்பதால் திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு முகாமுக்கு, நேற்று நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், சாந்தன் உட்பட நால்வரும் அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, வேலூர் மத்திய சிறையில் பெண் அதிகாரியிடம் முருகன் ஆபாசமாக நடந்துகொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக, அவர் திருச்சி முகாமில் இருந்து அவ்வப்போது அழைத்து செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 4 பேரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப ‘க்யூ’ பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக, சென்னையில் உள்ள வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க தேவையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.
மேலும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவு செய்து கொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதன் அடிப்படையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் வசிக்க அனுமதி கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நளினி காட்பாடியில் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து தெரிவித்ததாவது:
எங்களை மறக்காமல் இருந்த தமிழ் உணர்வுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்த எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய, மாநில அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது கணவர் என்னுடன் இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. தமிழ் மக்கள் 32 ஆண்டுகள் எங்கள் பின்னால் நின்று ஆதரவு கொடுத்துள்ளனர். நான் பொது வாழ்க்கைக்கு வர விரும்பவில்லை. ஒரு குடும்பத் தலைவியாக எனது கணவர், எனது மகள் என இருக்கப் போகிறேன்’’ என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து மீண்டு, மீண்டும் இல்லற வாழ்க்கையை துவங்கலாம் என்ற நிலையில் மீண்டும் கணவர் திருச்சி சிறை சிறப்பு முகாமிலும் நளினி காட்பாடியிலும் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil