Sandhya Murder Director Balakrishnan confession : சந்தியா கொலை வழக்கில், அவரின் கணவருமான இயக்குநர் பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள வாக்குமூலம் நெஞ்சை நிலைகுலைய செய்கிறது.
கடந்த ஜனவரி 21ம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் உடலில் இருந்து வெட்டப்பட்ட வலது கை மற்றும் இரண்டு கால்களும் ஒரு சாக்கு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வழக்கில் சுமார் 16 நாட்களுக்கு பின்னர் நேற்று அப்பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பெண்ணை கொலை செய்தது அவரது கணவரும் இயக்குநருமான பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.
சந்தியா கொலையாளியை காட்டிக் கொடுத்த டிராகன் டாட்டூ
இந்த வழக்கில் பல நாட்களாக பெண்ணின் அடையாளம் கண்டறிய தேடி அலைந்தனர் காவல்துறையினர். அவர்களுக்கு துப்பாக இருந்தது ஒன்று மட்டுமே. அது பெண்ணின் வலது கையில் இருந்த இரண்டு டாட்டூக்கள். ஒன்று சிவன் மற்றும் பார்வதி டாட்டூ. மற்றொன்று டிராகன் டாட்டூ.
இந்த இரண்டு டாட்டூக்கள் கொண்ட பெண்ணை தெரிந்தால் அடையாளம் காட்டுமாறு காவல்துறை அறிவித்திருந்தது. இருப்பினும், யார் தரப்பில் இருந்தும் அடையாளம் தெரிவிக்கப்படவில்லை. அதனால் கை ரேகை வைத்து அடையாளம் காண முடியுமா என்று ஆதார் அட்டை பிரிவினரை போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் கைகளில் செல்கள் இறந்துவிட்டதால், அடையாளம் காண முடியாது என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர்.
“மரம் அறுக்கும் எந்திரத்தால் சந்தியாவை துண்டு துண்டாக்கினேன்” இயக்குனர் பாலகிருஷ்ணன் வாக்குமூலம்
அடையாளம் காணும் அறிவிப்பு மற்றும் ரேகை கண்டுபிடிப்பு என இரண்டும் பலனளிக்காமல் போனதால், மற்றொரு முயற்சி தான் போலீசாருக்கு கைக் கொடுத்தது. சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் பட்டியலை அலசியது. அதில் 40 பெண்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
பின்னர் காணாமல் போன பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். வெட்டுண்ட கை மற்றும் கால்களை காட்டி அடையாளம் தெரிகிறதா என்று கேட்டுள்ளனர். பலரும் இல்லை இது எங்கள் வீட்டு பெண் இல்லை என்று கூறிவிட, ஒரே ஒரு குடும்பம் மட்டும் கையில் இருந்த டாட்டுவை பார்த்தவுடன் கதறி அழுதது.
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழுகையின் ஓசை மட்டும் சூழ்ந்திருக்க, அப்பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்று குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார். பொங்கல் பண்டிகைக்கு பின்னர் அவர் காணாமல் போனதாகவும் தெரிய வந்தது.
டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா. சந்தியாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா இயக்குனர் ஆவார். இவரது இயக்கத்தில் காதல் இலவசம் என்ற படம், கடந்த 2015 மே 8-ம் தேதி ரிலீஸ் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள். பாலகிருஷ்ணனும் சந்தியாவும் திருமணமாகி வெகு ஆண்டுகள் ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
கணவர் பாலகிருஷ்ணன் சந்தியாவுடன் எப்போதும் சண்டை போட்டு வந்தார், தீபாவளி பண்டிகையின்போது தான் சமாதானம் செய்து வைத்தோம் ஆனாலும் ஒத்து வரவில்லை. எனவே இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர் என்று சந்தியாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பாலகிருஷ்ணனிடம் கொலை குறித்து விசாரித்த போலீசார், அவர் 19ம் தேதியே சந்தியாவை கொன்றுவிட்டதாகவும், ஒரு நாள் முழுவதும் யோசித்து மாஸ்டர் பிளான் போட்டு இப்படி ஒரு விஷயத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
மாஸ்டர் பிளான் போட்ட இயக்குநர் பாலகிருஷ்ணன்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் சந்தியாவிற்கு அதிகமாக இருந்தது. விவாகரத்து பதிவு செய்த பிறகு, சென்னையில் தனியாகவே இருவரும் வாழ்ந்து வந்தனர். பாலகிருஷ்ணன் ஜாபர்கான்பேட்டையிலேயே தங்கி வந்தார். பிரிந்து வாழ்ந்த வந்த நிலையில், சென்னையில் தங்கியிருந்த சந்தியா, சினிமா வாய்ப்புகள் தேடிக்கொண்டிருந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரான தூத்துக்குடி சென்று வந்த சந்தியாவை, ‘சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது, நான் வாங்கி தருகிறேன். என் வீட்டிற்கு வா’ என்று அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். சண்டையாக இருந்தாலும், ஒன்றாக வாழ்ந்த கணவர் தானே என்ற நம்பிக்கையில் சென்றார் சந்தியா. ஆனால் அந்த நம்பிக்கை தான் அவருக்கு எமனாக மாறியது.
ஜனவரி 19ம் தேதி ஜாபர்கான்பேட்டையில் உள்ள பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்ற சந்தியாவிடம், சினிமா வாய்ப்பு என்ற ஆசை வார்த்தைகள் காட்டி பேசியுள்ளார். ஆனால் ஒரு நிபந்தனையும் வைத்திருந்தார். சினிமா வாய்ப்பு வாங்கித் தருகிறேன் ஆனால் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டளையிட்டார். இதனை ஏற்க மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சித்திருக்கிறார் சந்தியா.
ஆனால் அவரை வெளியே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்த பாலகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ய அது அப்படியே சண்டையாக மாறியுள்ளது. அந்த சண்டையின்போது, ஆத்திரத்தில் சுத்தியை வைத்து சந்தியாவின் மண்டையில் ஓங்கி அடிக்க, அங்கேயே சுருண்டு விழுந்தார். சில நொடிகளிலேயே அவரின் இறுதி மூச்சும் அடங்கியது.
பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், விடிய விடிய 19ம் தேதி முழுவதும் மனைவியின் சடலத்துடனே இருந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்னர் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்து மூச்சு முட்டும் அளவிற்கு குடித்த அவர், போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று யோசித்திருக்கிறார்.
உடனே சந்தியாவின் உடலை, பாத்ரூமிற்கு எடுத்துச் சென்று மரம் வெட்டும் ரம்பம் வைத்து துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர், வெட்டிய உடலை ஒரே இடத்தில் வீசினால், அடையாளம் தெரிந்துவிடும் என்பதால், வெவ்வேறு மூட்டைகளாக கட்டி, வெவ்வேறு இடங்களில் வீசியிருக்கிறார்.
அதில் கிடைத்த முதல் மூட்டையில் தான் வலது கை மற்றும் கால்கள் இருந்தது. டாட்டூ மூலம் அடையாளம் தெரிந்தவுடன், விசாரணை நடத்தியதில் சந்தியாவிற்கும் அவரது கணவருக்கும் தான் தகராறு இருந்ததாகவும், பொங்கலுக்கு பின் காணாமல் போனதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், சந்தியாவின் தாய் சுமார் 8 தடவைக்கும் மேல் தொடர்பு கொண்டபோதும் சந்தியாவிடம் பேச முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
பெண்ணின் கணவரான பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தாம் தான் அந்த கொலையை செய்ததாகவும், குப்பை தொட்டியில் இரண்டு மூட்டையை போட்டதாகவும், தலை மற்றும் மிச்சம் இருந்த உடல் பாகத்தை அடையாற்றில் வீசியதாகவும் தெரிவித்தார்.
அவரின் வாக்குமூலத்தை ஏற்று உடலை தேடிய போலீசாருக்கு, அடையாற்றில் இருந்த ஒரு மூட்டையில் இடுப்புக்கு கீழ் பகுதி முதல் தொடை வரை மற்றும் இடது கையும் கொஞ்சம் உடல் பாகமும் கிடைத்திருக்கிறது. ஆனால் தலை மட்டும் இன்னும் கிடைக்காததால் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மனைவி மீது கொண்ட சந்தேகத்தால், ராட்சசனாக மாறிய பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் கொலை திட்டமும் மொத்த சென்னை நகரத்தையுமே நிலைக்குலைய செய்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.