Sarath Kumar: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், தனது செல்போன் எண்ணை போலியாக உருவாக்கி, அந்த எண் மூலம் அழைப்பு செய்து மோசடி செய்த கோவையை சேர்ந்த மென்பொருள் இன்ஜினியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது செல்போன் நம்பரில் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
Advertisment
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் திருவான்மியூர் கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த நாட்களாக அவரது செல்போனுக்கு முக்கிய தலைவர்கள் பெயரிலும், விருந்தினர்கள் பெயரிலும் போலி அழைப்புகள் வந்திருக்கின்றன.
அதேபோல், சரத்குமார் பெயரை பயன்படுத்தி, தலைவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் போலி அழைப்புகள் சென்றுள்ளன. இதுகுறித்து அறிந்த சரத்குமார், அந்த மர்ம நபரிடம் சாதுர்யமாக பேசிய போது, அவர் கோவையைச் சேர்ந்த இன்ஜினீயர் என தெரியவந்தது. சாப்ட்வேர் உதவியுடன் பிரபலங்களின் குரலைப் போல் மற்றவர்களிடம் பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரத்குமார் சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுபோன்ற போலி அழைப்புகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "இனிமேல் யாருக்காவது முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களின் பெயரில் செல்போனுக்கு வரும் அழைப்புகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அதன் உண்மைத் தன்மையை அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற தேவையில்லாத அழைப்புகளை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil