‘சரவண பவன் ராஜகோபால்’ – ஒரு சாம்ராஜ்யம் சரிந்த கதை!

அன்று, ஜீவஜோதி மீது சபலத்தில் வீழ்ந்தவர் தான். வானுயர உயர்த்திய சாம்ராஜ்யத்திற்கான பெயரையும், புகழையும் முழுவதும் அடையாமலேயே, அந்த சபலத்தால் கொலையும் செய்து, இன்று உயிரை விட்டுக்கிறார் ராஜகோபால்

By: Published: July 18, 2019, 1:59:40 PM

‘சரவண பவன் ஹோட்டல்’ என்றும் சொல்லும் போதே ஷங்கர் படத்துக்கு இணையான ஒரு பிரம்மாண்டம் இருக்கும். பிரம்மாண்டம் என்பது வானுயர உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்கு அல்ல… உணவுக்கு.. உணவின் தரத்திற்கு… 2 இட்லிக்கு 4 வகை சட்னி என்று பிரம்மாண்டம் காட்டி சரவண பவன் எனும் மெகா பிராண்ட்டை உருவாக்கியவர் ராஜகோபால். இன்று, தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியுற்று, மனக்கஷ்டத்துடனேயே மரணித்திருக்கிருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணையாடி என்ற கிராமத்தில் 1947ம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். இவரது தந்தை ஒரு வெங்காய விவசாயி. வீட்டில் பெரியளவில் வசதி கிடையாது. இதனால், சிறு வயதிலிலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்த ராஜகோபால், 1973-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து, கே கே நகரில் மளிகைக் கடை ஒன்றை திறந்தார். ‘அண்ணாச்சி கடை’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட, தொடர்ந்து நல்ல முறையில் கடையை நடத்தி வந்தார். அதில், அவர் எதிர்பார்த்த அளவுக்கு லாபமும் கிடைத்தது.

மேலும் படிக்க – சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்… மரணப்படுக்கை வரை இழுத்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கு!

இந்த நிலையில் கே கே நகரில் உள்ளவர்கள் தி.நகருக்கு சென்று ஹோட்டலில் சாப்பிடும் நிலை இருந்ததால் அவர்களது நலன் கருதி 1981-ம் ஆண்டு கே.கே.நகரிலேயே ஒரு சிறிய ஹோட்டலை திறந்தார். அது தான் அவர் திறந்த முதல் ஹோட்டலாகும். முருகன் மீது அதீத பக்தி கொண்டதால் தனது ஹோட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார். இவரது ஹோட்டலின் சாம்பார், மற்ற இடங்களை விட சுவையாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மக்களாகவே இவரது கடைக்கு மார்க்கெட்டிங் செய்தனர். வாய் மொழியாகவே சரவண பவன் ஹோட்டலின் பெயர் பரவலாக சென்னை மாகாணம் முழுவதும் பரவியது.

மக்களின் ஆதரவு, எதிர்பார்த்ததை விட கிடைத்த வருமானம் என்ற இரண்டு தூண்களுடன் தனது வியாபாரத்தை விரிவுப்படுத்த தொடங்கினார் ராஜகோபால். அவ்வாறு தொடங்கிய முயற்சி இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகள், வெளிநாடுகளிலும் ஹோட்டல்கள் என 45 கிளைகளை தாண்டி அவரது இரண்டு இட்லிக்கு 4 வகை சட்னி போல் தாராளமாகவும் பிரம்மாண்டமாகவும் பரந்து விரிந்துள்ளது.

மேலும் படிக்க – தமிழகத்தில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இதர முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்க கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை ரயில் நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் என்று சென்னையில் மட்டும் இத்தனை கிளைகள் திறந்தார்.

அதேபோல், காஞ்சிபுரத்தில் இரு கிளைகள், வேலூரில் ஒரு கிளை, புதுடெல்லியில் ஜன்பத் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய பகுதிகளில் இரு கிளைகள், திருச்செந்தூர் அருகிலுள்ள புன்னை நகரில் ஒரு கிளை உள்ளது.

சென்னையில் மட்டும் இருப்பது கிளைகள், இந்தியா முழுவதும் 33 கிளைகள் என்பதைத் தவிர, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு நாடிகள், கண்டா, மலேசியா, சிங்கப்பூர், ஓமன், கத்தார் என ஒட்டுமொத்தமாக 47 கிளைகள் கொண்டு, உலகிலேயே மிகப்பெரிய தென்னிந்திய சைவ ஹோட்டல் எனும் பெருமையை, சாதனையை தாங்கி நிற்கிறது சரவண பவன்.

ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஒருவர் உருவாக்கி இருக்கிறார் என்றால், அதற்கு பிறகு எவ்வளவு பெரிய தொழில் நேர்த்தி, உழைப்பு, கடமையுணர்வு, அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும்?…. ஆனால், இவை அனைத்தும் சபலம் என்ற ஒற்றை வார்த்தையில் சுக்கு நூறாகி போய்விட்டது.

ஜோதிடத்தின் மீது ராஜகோபாலுக்கு இருந்த அதீத நம்பிக்கை காரணமாக, அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டால் தான், தொழிலில் நிலைத்திருக்க முடியும், உடல் நலமும் நன்றாக இருக்கும் என்று யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை வேத வாக்காக எடுத்துக் கொண்டதால் மட்டும் அவர் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள எண்ணவில்லை. 1994ம் ஆண்டு சரவண பவன் ஊழியர்களுக்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட ஜீவஜோதி, அன்று +2 படித்துக் கொண்டிருந்த மாணவி. அப்போது தான் ஜீவஜோதியை முதன் முதலாக ராஜகோபால் பார்க்கிறார். அன்று, ஜீவஜோதி மீது சபலத்தில் வீழ்ந்தவர் தான். வானுயர உயர்த்திய சாம்ராஜ்யத்திற்கான பெயரையும், புகழையும் முழுவதும் அடையாமலேயே, அந்த சபலத்தால் கொலையும் செய்து, இன்று உயிரை விட்டுக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையால் ராஜகோபால் வீழ்ந்தாலும், அவர் உருவாக்கிய சரவண பவன் எனும் பிராண்ட் என்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Saravana bhavan hotel rajagopal passed away jeeva jyothi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X