அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளரை களமிறக்க தயாராகி வரும் நிலையில், பா.ஜ.க போட்டியிடாவிட்டால் வேட்பாளரை களமிறக்க உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பொதுகுழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு கிடைக்கும் அல்லது முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஓ.பி.எஸ்-க்கு 3 நாள் கெடு.. 3-ம் தேதி மீண்டும் விசாரணை.. அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்றம்
இந்தநிலையில், புதிய திருப்பமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக வி.கே.சசிகலா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, இ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில், 2017 ஆம் ஆண்டில் நடந்த பொதுக்குழுவில் அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஓ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற கட்டணங்களை காரணம் காட்டி சசிகலா வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil