பாப்பாள்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைக்கவுண்டம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சமையலராக பணிபுரிந்து வருகிறார் பாப்பாள்.
42 வயதான பாப்பாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக அவர் சத்துணவு சமைக்கக் கூடாது என்றும் அவர் சமைக்கும் உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும் கிராம மக்கள் கூறினார்கள்.
பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள்
இந்தப் பரபரப்பான வலியுறுத்தலுக்குப் பிறகு, பள்ளியைத் திறக்கவிடாமல் பூட்டுப் போட்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவரை அந்தப் பள்ளியின் சத்துணவு சமையலர் பொறுப்பில் இருந்து பணியிடம் மாற்றம் செய்தார் ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி. அலுவலரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டமும் எதிர்ப்புகளும் கிளம்பியது.
மேலும் படிக்க: தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தது குற்றமா? அப்பாவி பெண்ணை அவமானப்படுத்திய கிராம மக்கள்
இதையடுத்து பாப்பாள் பணியிடம் மாற்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பாப்பாளை திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து எரிந்த தீண்டாமைப் பெருந்தீ; தொடரும் அநீதி:
இனி தடை எதுவும் இல்லை, சமையலர் பொறுப்பில் உள்ள கடமைகளை ஆற்றலாம் என்று எண்ணியிருந்த அப்பாவி பெண்ணிற்கு தொடர்ந்தது இந்த அநீதி. அதே பள்ளியில் பாப்பாள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் அவர் சமையலை சில மாணவர்கள் சாப்பிட மறுத்து, அவர்கள் வீட்டில் இருந்தே டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சில மாணவர்கள் தெரிவிக்கையில், பெற்றோர்கள் உணவைக் கையில் கொடுத்தனுப்புவதால் நாங்கள் இதையே சாப்பிடுகிறோம். இதைத் தவிர வேறு எந்த உணவையும் பள்ளியில் சாப்பிடக் கூடாது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பாப்பாள் அம்மாள்
திருமலைகவுண்டம் பாளையம் அரசுப் பள்ளியில் மொத்தம் 65 மாணவர்கள் சத்துணவு சாப்பிடப் பெயர் பதிவு செய்து உள்ளனர். ஆனால் அவர்களில் தற்போது 33 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். 32 மாணவர்கள் சத்துணவை நிராகரித்து அவர்கள் வீட்டில் இருந்தே மதிய உணவு எடுத்து வருகிறார்கள். தலித் பெண் சமைப்பதன் ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சத்துணவு சாப்பிட அனுமதிப்பதில்லை.
பள்ளி நிர்வாகமும் 65 மாணவர்களில் 33 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிடுகிறார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இந்தக் குற்றம் நடக்கிறதா என்பது குறித்த ஆய்வு பள்ளியில் நடைபெற இருக்கிறது. பாப்பாள் பெண்ணுக்கு நடக்கும் அநீதி தொடர்கிறது என்று நிரூபணமானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.