நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை, இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள்: குட்கா வியாபாரியிடம் தொடர்பு: காவலரை பணி இடை நீக்கம் செய்து ஆணையர் அதிரடி
இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னை, ராமபுரம் காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கூறி நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நேற்று முன்தினம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு ஆவணங்கள் உள்ளிட்ட பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் அளித்தார். மதியம் 1.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜரான நடிகை விஜயலட்சுமியிடம் மாலை 4.30 மணி வரை வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது வழக்கு சம்பந்தமான புகைப்படங்கள், ஆவணங்களை நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், விஜயலட்சுமி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சீமான், “என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது. நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள். விஜயலட்சுமி என்னுடன் ஒரு படம் நடித்தார். ஆனால் வீர லட்சுமிக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. 13 ஆண்டுகளாக தேர்தல் வரும்போதெல்லாம் இந்த பிரச்சனையை கிளப்புகிறார்கள்.
நான் காதலித்தேன், திருமணம் செய்தேன் என்று விஜயலட்சுமி சொல்கிறார். அப்படியானால் திருமணம் செய்துகொண்ட போது எடுத்த புகைப்படத்தை வெளியிட வேண்டியது தானே? விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. என் மீது அவதூறு கூறுவது போலவே நடிகை விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமி, நான் தன்னை ஏமாற்றியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தன்னை ஏமாற்றியதாக கர்நாடகா சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இதையே விஜயலட்சுமி வழக்கமாக கொண்டுள்ளார்.
எனக்கு திருமணமாகி இரு மகன்கள் இருக்கும் நிலையில், சமூக சிந்தனையுடன் செயல்படும் என் மீது சமூகத்துக்கு உண்டான செய்திகளைத்தான் பரப்ப வேண்டும். கருத்தியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புவது கேவலமான அரசியல். சமூக மரியாதைக்கு கட்டுப்பட்டு நான் அமைதியாக இருக்கிறேன். நான் அமைதியாக இருப்பதால் விஜயலட்சுமி சொல்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று நினைக்க வேண்டாம். ஒருநாள் நான் வெடித்துச் சிதறினால் கட்சிகள் தாங்காது. சமூகத்தில் மரியாதை உள்ள என் மீது அவதூறு பரப்புவதை பொறுக்கமுடியாது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“