அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை கேரள மாநிலம், கொச்சியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமலாக்கத் துறை இந்தத் தகவலை அப்போது உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்: சுதந்திர தின விழா; ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்; மு.க.ஸ்டாலின்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து முடிந்து, குணமடைந்ததையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேநேரம், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்தநிலையில், கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமாரை ஞாயிற்றுக்கிழமை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்தகட்டமாக அவரை சென்னைக்கு அழைத்துவந்து, அவரிடம் புகார் தொடா்பாக விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அசோக்குமார் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அசோக் குமாருக்கும், அவரது மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி ஆகியோருக்கும் ஜூன் 15 முதல் ஜூலை 16ஆம் தேதி வரை 4 முறை சம்மன் அனுப்பி, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டதாகவும், ஆனால், யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக கருதுவதால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil