திமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி

senthil balaji vs TTV Dhinakaran: செந்தில்பாலாஜி பொதுவெளியில் வாய் திறக்காதது வதந்தியை ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்துள்ளது.

By: Updated: December 13, 2018, 03:01:01 PM

சமீபத்திய செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக மாறியிருப்பவர் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.ம.மு.க.வின் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில்பாலாஜி.

டி.டி.வி.தினகரனின் கொங்கு மண்டல தளபதி, அவரின் தனிப்பட்ட பணவிவகாரங்களை கையாள்பவர் என அ.ம.மு.க.விற்குள் உயர்த்திப்பிடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி குறித்து, தி.மு.க. பக்கம் ஆறு அதிருப்தி முன்னாள் எம்.எல்.ஏ.க்களுடன் தாவப் போகிறார், அரவக்குறிச்சியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்க போகிறார் என செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.

மேலும் படிக்க: செந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்

டி.டி.வி.தினகரனை துணை முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்தார் என தங்கத் தமிழ்ச்செல்வன் மீடியாக்களிடம் கூறிய மறுநாளே செய்தியாளர்களை சந்தித்து ஓ.பி.எஸ். உடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்தவர் தினகரன். இதுவரையில் செந்தில்பாலாஜியின் கட்சி தாவல் குறித்து அவரோ, செந்தில்பாலாஜியோ பொதுவெளியில் வாய் திறக்காதது வதந்தியை ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்துள்ளது. என்ன தான் நடக்கிறது அ.ம.மு.க.விற்குள்?.. கட்சியின் வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம்.

“முதலில், பாராளுமன்றத் தேர்தலுக்காக புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் சேலஞ்சர் துரை தனக்கும் மண்டலப் பொறுப்பு அளிக்க வேண்டுமென்று தினகரனிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, 11 மண்டலங்களாக விரிவுப்படுத்தி புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியானது. செந்தில்பாலாஜி வசமிருந்த சில பாராளுமன்றத் தொகுதிகள், சேலஞ்சர் துரை வசம் ஒப்படைக்கப்பட்டன. அதிலிருந்தே இருவருக்கும் இடையேயான உரசல் தொடங்கிவிட்டது.

செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்டங்களிலும், நிர்வாகிகள் நியமனம், நீக்கம் என துரை தலையிட ஆரம்பித்தார். இது கொதிப்பை அதிகரித்தது. இச்சமயத்தில் தான் முன்னாள் அமைச்சர் தாமோதரனை சேலஞ்சர் துரைக்கு போட்டியாக செந்தில்பாலாஜி அ.ம.மு.க.விற்குள் கொண்டு வந்தார். ஆனால், துரைக்கு போட்டியாக கோவையில் தாமோதரனால் அரசியல் செய்ய முடியவில்லை. தினகரன் சுற்றுப்பயணம் செய்வதற்காக பிரச்சார டெம்போ வாகனத்தை சேலஞ்சர் துரை பரிசாக வழங்கியதிலிருந்து, இருவருக்குமான உறவு பலமாகிவிட்டது. இதனைப் பயன்படுத்தி செந்தில்பாலாஜியின் ஆதிக்கத்தை கட்சிக்குள் துரை கட்டுப்படுத்தினார். தினகரனிடம் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க, செந்தில்பாலாஜி பலமுறை முயன்றும் அது கைகூடவில்லை. இது தான் செந்தில்பாலாஜியின் அதிருப்திக்கு முக்கியக் காரணம்.” என்றார்.

தகுதிநீக்கம் செல்லும் என 18 எம்.எல்.ஏ.க்களின் தலையிலும் உயர்நீதிமன்றம் இடியை இறக்கிய பின்னர், இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா 10 ‘சி’ வழங்க கட்சியின் தலைமை உத்தரவாதம் அளித்திருந்ததாம். இதுவரை கோழி முட்டை கூட வழங்கப்படவில்லை. இதுவும் செந்தில்பாலாஜியின் அதிருப்திக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.வை, திருச்சியில் செந்தில்பாலாஜி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அந்த எம்.எல்.ஏ. மூலமாக ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவரோடும் செந்தில்பாலாஜி பேசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கே.சி.பழனிசாமியை தவிர்த்து கரூரில் பெரிய பலமில்லாத தி.மு.க., செந்தில்பாலாஜி தங்கள் பக்கம் இருந்தால் அரவக்குறிச்சியை கண்டிப்பாக தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதுகிறதாம். அரவக்குறிச்சி தொகுதியோடு, தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியும் தந்தால் மேலும் சில தொகுதிகளின் செலவையும் தானே பார்த்துக் கொள்வதாக செந்தில்பாலாஜி உத்தரவாதம் அளித்திருப்பது தி.மு.க. தலைமையை குளிர்ச்சியடைய செய்துள்ளதாம்.

செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்துவதற்காக பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், கடம்பூர் இளைய ஜமீன்தாரும், அ.ம.மு.க. அமைப்புச் செயலாளருமான மாணிக்கராஜா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் பிடிகொடுக்கவே இல்லை. செந்தில்பாலாஜியின் அதிரடி முடிவைத் தொடர்ந்து, தினகரன் மீது அதிருப்தியிலுள்ள ஆறு முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.விற்கு தாவும் ஐடியாவில் உள்ளனராம். அவர்களை கரூரிலுள்ள பெண் பெயரிலான தனியார் ஹோட்டலில் தனது செலவில் செந்தில்பாலாஜி அடைகாத்து வருவதாக கூறப்படுகிறது.

அ.ம.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “அதிருப்தியால் செந்தில்பாலாஜி கிளம்ப முடிவெடுத்தாலும், சூழ்ச்சி வலை பின்னி அவரை கட்சிக்குள் இருந்து வெளியேற்ற ஒரு கும்பல் சதி செய்கிறது. இக்கும்பல் தான் செந்தில்பாலாஜி குறித்த தகவல்களை மீடியாக்களிடம் கசிய விடுகின்றன. செந்தில்பாலாஜி கிளம்பிவிட்டால், கொங்கு மண்டலத்தில் தங்கள் கொடியை உயர்த்தி பிடிக்கலாம் என கணக்கு போடுகின்றனர்.

இப்போதாவது ஈகோவை விடுத்து செந்தில்பாலாஜியை அழைத்து தினகரன் பேச வேண்டும். கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசல், பொருளாதார நெருக்கடி இரண்டும் தான் அதிருப்தியாளர்களை மாற்றுக் கட்சியை நோக்கி படையெடுக்க வைக்கிறது. இதனை புரிந்து கொண்டு தினகரன் பேசினாலே போதும், அதிருப்தியாளர்கள் சாந்தமாகிவிடுவார்கள்.” என்றனர்.

அழைத்து பேசுவாரா தினகரன்?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Senthil balaji goes to dmk ttv dhinakaran

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X