அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய அறுவை சிகிச்சை தேவையற்றதா? அமலாக்கத்துறை விசாரணைக்காக அறுவை சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டதா? என மருத்துவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான மருத்துவர் வீ. புகழேந்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் இருதய அறுவை சிகிச்சையின் போது 3 இரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறது என்றும், அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை உடனடியாகத் தேவை என மருத்துவர்கள் (ஓமந்தூரர், ESI, அப்போலோ தனியார் மருத்துவர்கள்) அறிக்கை அளித்த நிலையில், அடைப்பின் அளவைக் கூறாமல் அறுவை சிகிச்சை உடனடியாகத் தேவை எனக் கூறுவது மருத்துவ ரீதியாக தவறு என்றும், உண்மையை அறிய வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என நான் கூறி வந்தேன்.
இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 26ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
இந்தநிலையில், தற்போது அமலாக்கத்துறை பத்திரிக்கை ஒன்றில் அவருக்கு 40% அடைப்பு மட்டுமே இருந்ததாகவும், அந்த அளவு அடைப்பு 47 வயதான பலருக்கும் வழக்கமாகவே இருக்கும் என்பதை வெளியிட்டுள்ளது, அறுவை சிகிச்சை மருத்துவத் தேவையின்றி நடந்ததோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புவதாக உள்ளது.
பொதுவாக 70-80% மேல் அடைப்பு இருந்தால் மட்டுமே உடனடி மருத்துவ அறுவை சிகிச்சைக்கான தேவை இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெளிவாக சொல்கின்றன. அமைச்சருக்கு 40% அடைப்பு மட்டுமே இருந்திருக்கிறது என்றால், அறுவை சிகிச்சை மருத்துவ ரீதியாக நிச்சயம் உடனடித் தேவையாக அமையாது. அப்படியெனில் அறுவை சிகிச்சை அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டதா? எனும் முக்கிய கேள்வி எழுகிறது. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை குறித்து ஏன் தகுந்த ஆலோசனை வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்குமா?
தனியார் மருத்துவமனையில் 18, ஜுன் அன்று அமைச்சருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக்காக, அது 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்ற தகவல் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு, அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், அதற்கான ஆதாரங்களை அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என சரியாக வாதிட்டுள்ள நிலையில், கூடுதலாக இன்னொரு முக்கிய தகவலும் உள்ளதை அமலாக்கத்துறை மறந்தது ஏன்?
அது, ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சரின் இருதயப் பிரச்சனையை கருத்தில் கொண்டு, அவருக்கு இரத்தம் உறையாமல் இருக்க ஹெபாரின் மற்றும் ஆஸ்பிரின் மாத்திரை கொடுக்கப்பட்டது. இதனால், உடனடி அறுவை சிகிச்சை செய்தால் இரத்தம் அதிகம் வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மருந்துகளை நிறுத்தி 3-5 நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே, அதிகம் இரத்தம் அறுவை சிகிச்சையின் போது வெளியாவதைத் தடுக்க முடியும் என்பதால் மட்டுமே மருத்துவரீதியாக அறுவைசிகிச்சை தள்ளிப்போட்டதற்கு உண்மை காரணமாக இருந்தது என்றிருக்க, அமலாக்கத்துறை விசாரணைக்காக, அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது முற்றிலும் தவறு என்பதே உண்மை. அமைச்சர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த கருத்து முற்றிலும் தவறானது.
மேலும், அமலாக்கத்துறை சார்பில் மருத்துவமனையில், அமலாக்கத்துறை அமைச்சரை மருத்துவர்கள் முன்னிலையில் விசாரிக்கும் போது, அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்கான தெளிவான விடை இல்லாததாலே, அமலாக்கத்துறை அமைச்சரை மருத்துவமனையில் விசாரிக்கவில்லை என்ற வாதத்தில் என்ன தவறு உள்ளது? ஆக, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதங்கள் தவறாக இருக்கும் வாய்ப்பே அதிகம்.
மேலும், 40% அடைப்பு 47 வயதாகும் பலருக்கும் பாதிப்பின்றி இருக்கும் என்பதே உண்மை என்றிருக்க அமைச்சர். செந்தில்பாலாஜி அவர்களின் இருதய அறுவை சிகிச்சையே தேவையற்றது என்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். மருத்துவ காரணங்களே, அரசியல் தலையீடின்றி, மருத்துவ தேவைகளை தீர்மானிக்க வேண்டும் என்பது எப்போது தான் நடைமுறையில் நிறைவேறும்?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil