Sheik Dawood Maraikayar provide briyani to cleaning workers in Nagapattinam : நாடு முழுவதும் உழைப்பாளர்கள் தினம் மே 1-ஆம் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸால் உலகமே முடங்கியிருக்க கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் பலரும் நேற்று தங்களின் சேவையை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக நேற்று தொழிலாளர் தினம் அர்ப்பணிக்கப்பட்டது
Advertisment
துபாய் நாட்டில் இருக்கும் நாகூரை சேர்ந்த தனியார் பள்ளி உரிமையாளர் ஷேக்தாவூத் மரைக்காயர் என்பவர் உழைப்பாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று ஒரு காரியம் செய்துள்ளார். நாகையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
நாகூரில் இருக்கும் தன்னுடைய நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைத்தார். இவ்விருந்து நிகழ்ச்சி நாகையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு நடத்தப்பட்டது. நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் யேசுராஜ் பிரியாணியை அவர்களுக்கு பரிமாறினார்.
துபாயில் வசிக்கும் ஷேக் தாவூத் மரைக்காயர் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த செயல்பாட்டுக்கு பலரும் வரவேற்பு தந்து, ஷேக் தாவூத்தை வாழ்த்தியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil