scorecardresearch

தமிழகத்தின் கடைசி ஜமீன்தார்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தார்.

Singampatti Zamin Murugadoss death
Singampatti Zamin Murugadoss death

Singampatti Jameen: தமிழகத்தின் கடைசி ஜமீன் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் 31-வது பட்டம் பெற்ற டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி நேற்று மறைந்தார்.

இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். அப்போது அவருக்கு வெறும் மூன்றரை வயது தான். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

மிரட்டும் கொரோனா: தமிழகத்தில் 80 சதவிகிதம் மரணம் சென்னையில்!

தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட நிலையில், இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடி தமிழகத்தின் கடைசி ஜமீனாக வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தாரான முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தார்.

ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வந்தார் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி. அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன. இந்நிலையில் 89 வயதாகும் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, நேற்றிரவு உடல்நலக் குறைவால் மரணமடைந்திருக்கிறார்.

இது குறித்து திமுக செய்தி தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில், “நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர் தான்.

இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம். கடந்த 1972-ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம் லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா முதலியார்
பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம். அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை.

கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது. இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்திரம் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கும் ஐசிஐசிஐ – விவரம் இங்கே

இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004-ல் “நிமிர வைக்கும் நெல்லை” என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , “நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி” என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Singampatti jameen murugadoss tirthapathi death in tirunelveli