/tamil-ie/media/media_files/uploads/2018/05/soupa-arrested.jpg)
Souba Arrested in Son's Murder case, Death
எழுத்தாளர் செளபா, திடீரென மரணம் அடைந்தார். தனது மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றவர், அதற்குள்ளாக மரணத்தை தழுவியிருக்கிறார்.
எழுத்தாளர் செளபா, தமிழில் முன்னணி வாரமிருமுறை இதழில் செய்தியாளராக அறிமுகம் ஆனவர்! மதுரையை சேர்ந்தவர் இவர். அந்த வட்டாரத்தில் நடைபெற்று வந்த பெண் சிசுக்கொலையை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி, தேசிய ஊடகங்களின் கவனம் பெற்றவர் இவர்! அதுதான் கருத்தம்மா என்ற பெயரில் பாரதிராஜா படம் எடுக்கவும் தூண்டுதலாக அமைந்தது.
செளபா, பத்திரிகைப் பணியில் இருந்து சினிமாத் துறைக்கும் சென்று சாதித்தார். இவர் கதாசிரியராக பணியாற்றிய ‘சீவலப்பேரி பாண்டி’ படம் பெரும் வெற்றி பெற்றது. இவரது மனைவி லதா, கோவில்பட்டியில் அரசு கல்லூரி ஒன்றில் பணிபுரிகிறார்.
செளபாவும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் ஒரே மகன் விபின் பாதிநாள் தந்தையுடனும் மீதி நாள் தாயுடனும் வசித்து வந்தார். ஊதாரித்தனமாக சுற்றிய விபின், பணம் கேட்டு செளபாவுக்கு ஏக டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் விபினை திடீரென காணவில்லை. இது குறித்து விபினின் தாயார் லதா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் செளபா தனது மகன் விபினை அடித்து கொலை செய்து தோட்டத்தில் எரித்து புதைத்துவிட்டது தெரிந்தது.
செளபா-வை கடந்த மே 10-ம் தேதி போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். விரக்தியான புன்னகையுடன் சிறைக்கு சென்ற செளபாவுக்கு மே 22-ம் தேதி வாக்கில் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 10) அவர் இறந்தார்.
செளபா கைதானபோது, ‘ஐஇ தமிழ்’ வெளியிட்ட செய்தி படிக்க இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.
மகனை கொலை செய்த வழக்கில் சிக்கி, ஒரே மாதத்தில் அவர் மரணத்தை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.