தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த குழு, தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
அதன் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது, முறையாக நோட்டீஸ் அனுப்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கடந்த டிச.15ம் தேதி உத்தரவிட்டது. 3 வாரத்தில் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு குறித்த முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இன்று கூட, 'ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்' என முதல்வர் பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தீர்ப்பை எதிர்த்து முறையீடு
இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால், எங்கள் தரப்பு கருத்துகளை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.
முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவுறுத்தி இருப்பதால், பாத்திமா சார்பில் அவரது வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்ய உள்ளார்.