sujith rescue process : மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி மூன்று நாட்களாக நடைபெற்றுவருகிறது. ஆனாலும், இன்னும் குழந்தையை மீட்க முடியவில்லை. ஊடகங்களைப் பார்க்கிற மக்கள் மத்தியில் குழந்தை மீட்கப்படுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுவருகிறது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பிரிட்டோ என்பவரின் குழந்தை சுஜித் வில்சன் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் நேற்று முன்தினம் தவறி விழுந்தது. இதையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் 53 மணி நேரங்களைத் தாண்டி மூன்றாவது நாளாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
முதலில் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் 26 அடியில்தான் இருந்தது. அப்போதே ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே ஜே.சி.பி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பக்கவாட்டில் குழந்தையை மீட்டுவிடலாம் என்று முயற்சி செய்யப்பட்டது. அதிர்ச்சியால் குழந்தை உள்ளே சென்றுவிடும் அல்லது மண்சரிவு ஏற்படும் என்று அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.
பிறகு மதுரையில் இருந்து மணிகண்டன் என்பவர் தான் கண்டுபிடித்த கருவியுடன் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், குழந்தை ஆழத்தில் இருந்ததால் ஒரு கையை சுருக்கு கயிறு மூலம் கட்டி வைத்தனர். பின்னர், இன்னொரு கையில் சுறுக்கு கயிறு மாட்டலாம் என்றால் முடியவில்லை. ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஈரம் அதிகம் ஆனதால், குழத்தையின் கைகள் ஈரமாக இருந்தது.
இதையடுத்து, கோவையில் இருந்து ரூபின் டேனியல் குழுவினர் குழந்தையை மீட்க வந்தனர். அவர்களாலும் குழந்தையை மீட்க இயலவில்லை. பின்னர், ஐ.ஐ.டி குழுவினர் வந்தனர். அவர்கள் நவீன கருவிகளுடன் குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களாலும் குழந்தை மீட்க முடியவில்லை. பின்னர், புதுக்கோட்டையில் இருந்து ஒரு குழுவந்து குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். அவர்களாலும் முடியவில்லை. இதனிடையே, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்மதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று குழந்தையை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்துதான், ரிக் இயந்திரம் மூலம் ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பள்ளம் தோண்டி பின்னர் பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்பது என்று முடிவானது. அதற்குள் குழந்தை 80 அடிக்கு கீழே சென்றுவிட்டான்.
ஞாயிற்றுக்கிழமை காலை ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், அங்கே கடினத்தன்மையான பாறைகள் இருப்பதால் துளையிடும் பணி தாமதமானது. இதையடுத்து, அதிக சக்திவாய்ந்த துளையிடும் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதை பொருத்தும் பணி நடைபெற்றது. அதற்குள் முதல் ரிக் இயந்திரம் 35 அடி ஆழம் மட்டுமே துளையிட்டது. அப்பொது இடையிடையே மழை பெய்ததால் மீட்பு பணி வேகப்படுத்த முடியவில்லை. என்றாலும் மீட்பு பணி தொய்வு இல்லாமல் நடந்தது.
பள்ளத்துக்குள் மழை தண்ணீர் புகாமல் இருக்கு பள்ளம் தோண்டப்பட்ட பகுதியைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. பழுதான ரிக் இயந்திரம் சீர் செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.
மேலும் படிக்க : பிழியும் சோகம் ஒருபுறம்; தளராத நம்பிக்கை மறுபுறம்: சுஜித் மீட்பு ஹைலைட்ஸ்
இப்போது குழந்தை 80 அடிக்கு கீழே இருப்பதால் பள்ளம் தோண்டும் பணி 98 அடி இலக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தை எங்கே இருக்கிறான் என்பது கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி குழுவினர் நேற்று ரோபோட்டை உள்ளே செலுத்தி ஆய்வு செய்ததில் குழந்தையின் உடல் வெப்பநிலையில்தான் உள்ளது என்றும் 75 மணிநேரத்தில் மீட்டால் குழந்தையை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தனர்.
தற்போது 53 மணி நேரங்களைக் கடந்துவிட்டோம். இன்னும், 20 மணிநேரத்தில் 70 அடிகள் பள்ளம் தோண்டப்பட்டுவிட்டால் குழந்தையை மீட்டுவிடலாம் என்று மீட்புக் குழுவினர் அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், குழந்தையை மீட்பதில் தாமதம் ஏற்படுவதற்கும், மீட்பு பணிக்கு மிகவும் சவாலாக இருப்பது கடினத்தன்மையுள்ள பாறைகள்தான் காரணம். இன்னும் சிறிது நேரத்தில் அதிக சக்திவாய்ந்த ரிக் இயந்திரமும் இயக்கப்பட உள்ளது. அதனால், மீட்பு பணி மேலும் துரிதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.